திருநெல்வேலி:நம் நாட்டில் இந்துக்கள் பல்வேறு வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். மாதந்தோறும் அமாவாசை தினத்தில் பெரும்பாலோனார் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவது வழக்கம். அதிலும், ஆடி மாதத்தில் வரும் அமாவாசை பிரசித்தி பெற்ற வழிபாடாக தமிழக மக்கள் மத்தியில் விளங்கி வருகிறது.
மாதந்தோறும் வழிபாடு மேற்கொள்ள முடியாதவர்கள், ஆடி அமாவாசையில் வழிபாடு மேற்கொண்டால் ஆறு மாதம் தங்கள் முன்னோர்களை வழிபட்டதற்கு சமம் என்பது ஐதீகம். எனவே, ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவார்கள். குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆடி அமாவாசை வெறும் முன்னோர்கள் வழிபாடாக மட்டுமல்லாமல், மக்கள் மத்தியில் ஒரு திருவிழாவாக பார்க்கப்படுகிறது.
ஐயப்பனின் ஆறாவது படை வீடு: அந்த வகையில், திருநெல்வேலி பாபநாசம் அருகே தாமிரபரணி ஆற்றுக்கு நடுவே அமைந்திருக்கும் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையன்று திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். ஆடி அமாவாசை தினங்களில் இக்கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து வாழிபாடு செய்வார்கள்.
சிறப்பு வாய்ந்த ஆடி அமாவாசை இந்த ஆண்டு வரும் 4ஆம் தேதி வருகிறது. இந்நிலையில், ஆடி அமாவாசையின் சிறப்புகள் என்ன என்பது குறித்து திருநெல்வேலியைச் சேர்ந்த ஜோதிடர் சங்கர சுப்பிரமணி என்பவர் ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், “ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்தால், ஆறு மாதமும் கொடுத்த பலன் ஏற்படும். ஆடி அமாவாசையில் சூரியனும், சந்திரனும் ஒரே நட்சத்திரக் கோட்டில் இருக்கும்.
27 தலைமுறை பந்தம்: சர்வ பித்ரு அமாவாசை, போதாயன அமாவாசை என மொத்தம் இரண்டு அமாவாசை உள்ளது. போதாயன அமாவாசை சில மாதங்களில் மட்டுமே வரும். இந்த ஆண்டு குரோதி வருடம் ஆடி அமாவாசை வரும் 4ஆம் தேதி, ஆடி மாதம் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. இந்த முறை பூசம் நட்சத்திரமும், சகுனி கர்ணமும் சேர்ந்து வருகிறது. இந்த அமாவாசையில் செய்யக்கூடிய திதி முழுமையான பலனை கொடுக்கும். நமது உடம்பில் ஓடும் 27 வகையான ஜீன்களும் 27 தலைமுறையிலான மூதாதையர்களைக் குறிக்கும்.
நீர்நிலைகளில் திதி கொடுப்பதற்கான காரணம்:முன்னோர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாகவும், அவர்களை திருப்திபடுத்தும் விதமாகவும் அமாவாசை வழிபாடு மேற்கொள்வர். தென்னிந்தியாவில் முதலில் மூதாதையர் வழிபாடு தான் தோன்றியது. நீருக்கு ஒளியைக் கடத்தும் சக்தி இருப்பதால் தான் நீர்நிலைகளில் பொதுவாக திதி கொடுக்கிறார்கள். நீர்நிலைகளில் வைத்து முன்னோர்களுக்கு செய்யக்கூடிய வழிபாடு கண்டிப்பாக அவர்களுக்குச் சென்று சேரும்.