சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேசிய மற்றும் மாநில அளவில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணிகளைத் துவங்கியுள்ளன. குறிப்பாக, கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை, உறுப்பினர் சேர்க்கை மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பது என பல்வேறு கட்ட பணிகளைத் தொடங்கி நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ்-க்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு என்பது தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றதன் அடிப்படையில் கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற இறுதிக்கட்ட பேச்சு வார்த்தையில் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் என முடிவு எட்டப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தைப் பொறுத்தவரை எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதில், இன்று (மார்ச்.14) காலை மதிமுகவிற்கும், மதியம் காங்கிரஸ்-க்கும் எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பது தொடர்பாகப் பேச்சுவார்த்தைக்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது, ஆனால், தற்பொழுது வரை காங்கிரஸ் உறுப்பினர்களோ அல்லது மதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகளோ யாரும் வரவில்லை.