சென்னை:தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, மருத்துவம் சார்ந்த துணை பட்டப்படிப்புகளில் மாணவர்களை ஒற்றை சாளர முறையில் சேர்க்கை நடத்துவதற்கான பணிகளை மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் துவக்கி உள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பிஎஸ்சி மற்றும் பிஓடி, பிபிடி, பிபார்ம், பிஏஎஸ்எல்பி ஆகிய பட்டப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு விண்ணப்பங்கள் மே மாதம் 2வது வாரம் முதல் தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டிய அனைத்து விவரங்களுக்கும் www.tnhealth.tn.gov.in அல்லது www.tnmedicalselection.org என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட உள்ளது.
மேலும், மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் சென்று விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் மாணவர்களுக்கான கலந்தாய்வு ஒற்றை சாளர முறையில் நடத்தப்படும். 2024-2025ஆம் கல்வியாண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் தமிழ்நாட்டில் 19 பட்டப்படிப்புகள், 19 அரசு மருத்துவக் கல்லூரியில் 2,536 இடங்கள் இருக்கின்றன.
தனியார் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் 4 விதமான பட்டப்படிப்புகளில் 22,200 இடங்கள் இருக்கின்றன. அவற்றில் 14 ஆயிரத்து 157 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கு அளிக்கப்பட்டு இருந்தது. 2023-2024ம் கல்வியாண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் தமிழ்நாட்டில் 19 பட்டப்படிப்புகள் 19 அரசு மருத்துவக் கல்லூரியில் 2,500 இடங்கள் இருக்கின்றன. தனியார் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் பிபார்ம், பிஎஸ்சி, பிபிடி, பிஒடி ஆகிய 4 விதமான பட்டப் படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டில் 17 ஆயிரம் இடங்கள் உள்ளன.
மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு தமிழ்நாடு அரசு அல்லது அதற்கு சமமான குழுமத்தால் நடத்தப்படும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை எடுத்து படித்து இருக்க வேண்டும். சென்னை, மதுரை, செங்கல்பட்டு, சேலம், தேனி, கடலூர் ஆகிய 6 மருத்துவக் கல்லூரியில் 350 இடங்கள் உள்ளது.