தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென் மாவட்ட பள்ளிகளில் பெருகும் சாதி மோதல்கள்; போர்க்களமாக மாறும் கல்விக் கூடங்கள்.. தீர்வு தான் என்ன? - CASTE CONFLICTS IN SCHOOLS

தென் மாவட்டங்களில் பள்ளி மாணவர்களிடையே நடக்கும் சாதி பிரச்சனையால், புத்தகங்களை சுமக்கும் மாணவர்கள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு வருவதால் கல்விக் கூடங்கள் போர்க்களமாக மாறியுள்ளன. இதற்கு தீர்வு என்ன?

பள்ளிகளில் அதிகரித்துள்ள சாதி ரீதியான மோதல் -சித்தரிப்புப் படம்
பள்ளிகளில் அதிகரித்துள்ள சாதி ரீதியான மோதல் -சித்தரிப்புப் படம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2024, 4:28 PM IST

திருநெல்வேலி: தமிழகத்தில் தென் மாவட்டங்கள் என்றாலே ஒரு சிறப்பு தான். நாட்டின் முக்கிய இரு முனைகளாக காஷ்மீர் டூ கன்னியாகுமரி என்பார்கள், இந்த கன்னியாகுமரி தமிழகத்தின் தென் மாவட்டத்தில் தான் முடிவடைகிறது. வீரமிக்க பாண்டிய மன்னர்களின் வரலாறு, மதுரை மல்லி, சிவகாசி பட்டாசு, தூத்துக்குடி உப்பு, நெல்லை அல்வா, தென்காசி சாரல் என தென் மாவட்டங்கள் பல சிறப்புகளை பெற்றிருந்தாலும் , சாதி என்ற ஒற்றை வார்த்தையால் தனது சிறப்புகளை இழந்து வருகிறது.

குறிப்பாக, தென் மாவட்டங்களில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதி கலவரங்கள் பெரிய அளவில் நடந்தது. ஆனால், கடந்த சில வருடங்களாக சாதி மோதல் தொடர்பான கலவரங்கள் படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில், தற்போது பள்ளிகளில் சாதி ரீதியான மோதல்கள் அதிகரித்து வருவது கல்வியாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதிலும், தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு எனக்கூடிய திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அதிகளவு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக பள்ளிகளில் ஏற்படும் சாதி மோதல் சம்பவம் பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளிகளில் ரத்த கறை: கடந்த ஆண்டு நாங்குநேரியில் சின்னத்துரை என்ற மாணவரின் வீட்டில் புகுந்து சக மாணவர்கள் சரமாரியாக அவரை கொடூரமாக வெட்டிய சம்பவம் திருநெல்வேலிக்கு தீரா வடுவாக தற்போது வரை உள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, நெல்லையில் பள்ளி மாணவர்களிடையே சாதிய மோதல் அதிகரித்து வருகிறது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் நாங்குநேரி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு சிலர் முறையாக பள்ளிக்கு வராமல் இருந்ததாகவும், சரிவர படிக்காமல் படிப்பில் கவனக்குறைவுடன் செயல்பட்டு வந்த நிலையிலும், ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

அந்த மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்தனர். உடனே அந்த மாணவர்கள் அந்த ஆசிரியரை தாக்க தங்களது புத்தகப்பையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, மூன்று மாணவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அதே ஆகஸ்ட் மாதம் இறுதியில் தாழையூத்து பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், பள்ளி மாணவர் இடையே ஏற்பட்ட மோதலில் பாதுகாப்பு கருதி மாணவர் ஒருவர் பள்ளிக்கு புத்தக பையில் அரிவாள் எடுத்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரிவாள் கொண்டு வந்த மாணவர் மற்றும் அவருக்கு உதவிய மாணவர்கள் என மூன்று பேர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பேனாவுக்கு பதில் அரிவாள்: நெல்லை சந்திப்பு ஸ்ரீபுரம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஒரு மாணவர், புத்தகப் பையில் இரும்பு ராடு மற்றும் அரிவாளுடன் வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து, மாணவனிடம் ஆசிரியர்கள் சோதனை செய்த போது, புத்தக பையில் இருந்து அவற்றை கைப்பற்றினர். பின்னர் பள்ளி நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் மாணவரிடம் விசாரணை செய்தனர். அப்போது, கொண்டான் நகரம் பகுதியில் இருந்து தான் பள்ளிக்கு வருவதாகவும், அதே பகுதியை சேர்ந்த சில மாணவர்களுடன் ஏற்பட்ட மோதலால், பாதுகாப்புக்காக பள்ளிக்கு அரிவாளை கொண்டு வந்ததாகவும் மாணவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாணவரின் பெற்றோர் பள்ளிக்கு அழைக்கப்பட்டு, மாணவருக்கு டி.சி. வழங்கியதாக கூறப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தை பொருத்தவரை கடந்த ஜூலை மாத செப்டம்பர் மாதங்களில் மட்டுமே, பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் மற்றும் ஆயுதங்கள் எடுத்து வந்ததாக கூறி, சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது (CSR) மனு ரசீது கொடுக்கப்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சக மாணவர்களுடன் ஏற்படும் சிறுசிறு கருத்து மோதலை சுலபமாக எதிர்கொள்ளும் பக்குவம் இன்றி அதனை வன்முறை நோக்கில் கையாள்வது எதிர்கால தலைமுறையினரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, மத்திய பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள விஜயநாராயணம் கேந்திரிய வித்யால பள்ளியில் சமீபத்தில் சாதாரண பிரச்சனைக்கு மாணவர் ஒருவர் புத்தகப் பையில் சிறிய அரிவாளை மறைத்து எடுத்து வந்து பள்ளியில் வைத்தே சக மாணவரின் தலையில் வெட்டியுள்ளார். பேனா கறை சிந்த வேண்டிய பள்ளி வகுப்பறைகளில், ரத்தக்கறை சிந்துவதை கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சியோடு பார்க்கின்றனர்.

இவற்றை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல் கட்டமாக அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடைபெறும் பள்ளிகளை கண்டறிந்து அங்குள்ள மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் இது மட்டுமில்லாமல் சம்பந்தப்பட்ட காவல் நிலைய மூலமாக காலை பிரேயர் நடைபெறும் போது இது தொடர்பாக விழிப்புணர்வு நடத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கு தொடங்குகிறது?

பொதுவாகவே நெல்லை, தென்காசி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் இளைஞர்கள் மத்தியில் சாதி பெருமை பேசுவதும், ஜாதி சார்ந்த திரைப்பட நடிகர்களை கொண்டாடுவதும், திருமண நிகழ்ச்சி உட்பட சுப நிகழ்ச்சிகளில் சாதி தலைவர்களின் புகைப்படங்களை அச்சடித்து பெருமை கொள்வதும் காலம் தொட்டு நடைபெற்று வருகிறது.

அதே போல் சில குடும்பங்களில் குழந்தைகளின் தந்தை தீவிர சாதி பற்றாளராக இருப்பார்.. அதை வீட்டில் தனது குழந்தைகள் முன்வைத்தே வெளிப்படுத்தும் விதமாக தொலைபேசியிலோ அல்லது தனது நண்பர்களிடம் நேரிலோ குழந்தைகளை வைத்துக் கொண்டே நம்ம சாதி தான் உயர்ந்தது, அதை நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது என்றெல்லாம் பெருமை பேசும் சம்பவமும் வாடிக்கையாக நடைபெறுகிறது.

எனவே, தந்தையின் இந்த பேச்சைக் கேட்கும் குழந்தைகள் இயல்பாகவே தானும் அது போன்று சாதி பெருமையை மனதிலே கொள்ள வேண்டும் என்ற ஒரு தாக்கத்தை உள்வாங்கிக் கொள்வதை பார்க்க முடிகிறது. அதேபோல், சாதி வன்கொடுமைகள் கடைபிடிக்கப்படும் கிராமங்கள் இன்னும் பல உள்ளன. இவற்றையும் குழந்தைகள் பார்க்கும் போது இயல்பாகவே தானும் அது போன்ற வன்கொடுமைகளை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது. குறிப்பாக சமீபத்தில் வெளியான புள்ளி விவரங்கள் அடிப்படையில், தமிழகத்தில் சாதி வன்கொடுமைகள் அதிகம் கடைபிடிக்கப்படும் மாவட்டங்களில் திருநெல்வேலி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 29 கிராமங்கள் சாதி வன்கொடுமைகள் அதிகம் கடைபிடிக்கப்படுவதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பள்ளிகளில் மாணவர்கள் சாதி ரீதியாக மோதிக் கொள்வதற்கு வீட்டு சூழலும் மிக மிக முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

தீர்வு என்ன?

இதுகுறித்து ஓய்வு பெற்ற நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் நம்மிடம் கூறும் போது, ''பொதுவாக முந்தைய காலகட்டங்களில் நீதி போதனை வகுப்புகள் மாணவர்களுக்கு கட்டாயம் எடுக்கப்பட்டது. முதல் வகுப்பிலேயே நீதி போதனை நடத்தப்படும்.. ஆனால், காலப்போக்கில் அது போன்ற நீதி போதனை வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. பள்ளியில் ஏற்படும் மோதல்களுக்கு இதுவும் ஒரு காரணம். அதே போல், ஆசிரியர்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை, ஆசிரியர்கள் தண்டிக்கப்படுவது மிகவும் கொடூரமானது. பெற்றோர்களுக்கும், தங்கள் குழந்தை மீது முழு அக்கறை வேண்டும். பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்றதும் அவர்களது நடவடிக்கை எப்படி இருக்கிறது என்பதை பெற்றோர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அதேபோல் காலையில் பள்ளிக்கு செல்லும் போது அவன் புத்தகப் பையில் எதை எடுத்துச் செல்கிறான் என்பதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மூன்று பேரும் ஒரே புள்ளியில் இணைந்து செயல்பட்டால் தான் இது போன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்'' என்று தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details