சென்னை: தமிழக அமைச்சரவை 5 ஆவது முறையாக மாற்றம் செய்யப்பட்டதுடன், துணை முதல்வர் பொறுப்பும் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் முதல்வர் ஸ்டாலின் உட்பட தற்போது 34 அமைச்சர்கள் உள்ளனர். முன்னதாக, 33 அமைச்சர்கள் இருந்து வந்த நிலையில், அதில் 3 பேர் நீக்கப்பட்டு இரண்டு முன்னாள் அமைச்சர்களும், புதிதாக இரண்டு பேரும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையும், ஆவடி நாசருக்கு சிறுபான்மையினர் நலத்துறையும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள கோவி.செழியனுக்கு முக்கிய துறையான உயர்கல்வித் துறையும், ராஜேந்திரனுக்கு சுற்றுலாத் துறையும் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிதாக அமைச்சரவைக்குள் நுழைந்துள்ள கோவி.செழியன் பட்டியலினத்தை (ஆதி திராவிடர்) சேர்ந்தவர். ஏற்கனவே, அமைச்சரவையில், கயல்விழி செல்வராஜ் (தேவந்திர குல வேளாளர்), சி.வி. கணேசன் (ஆதி திராவிடர்), மதிவேந்தன் (அருந்ததியர்) ஆகிய மூன்று பேர் இருந்து வருகின்றனர். அந்த வரிசையில் கோவி.செழியன் என தமிழக அமைச்சரவையில் பட்டியலினத்தை சேர்ந்த அமைச்சர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
இந்த அமைச்சரவை மாற்றம், கடந்த சில தினங்களாக திமுக மீது அதிருப்தியில் இருந்து வரும் விசிக-வை சற்று தேற்றும்படிப்படியாகத்தான் பார்க்கப்படுகிறது. மேலும், விசிக நிர்வாகிகள் சில நாட்களுக்கு ''ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு'' என்ற கோஷத்தை வைக்காமல் இருக்கவும் இது உதவும். அத்துடன், இது இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்படும் சலசலப்புகளால் எதிர்கட்சிகளிடம் இருந்து கிளம்பும் விமர்சனங்களையும் குறைக்கும் என கூறப்படுகிறது.
திமுகவில் துணை முதல்வர் பதவி தொடங்கியதோடு விசிக-வில் இருந்து பல்வேறு கருத்துக்களும், விமர்சனங்களும் எழ தொடங்கின. விசிக தலைவர் திருமாவளவனின் எக்ஸ் பக்கத்தில், ''ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு'' என்று பேசிய வீடியோக்களை பதிவிட்டு பரபரப்பை கிளப்பினார். சம்மந்தமே இல்லாமல் திடீரென அந்த வீடியோக்கள் பதிவாகி பேசுபொருளானது. ''கூட்டணியில் இருந்தால் சீட் ஷேர் மட்டும் போதாது, பவர் ஷேர் வேண்டும்'' என்பதே திருமாவளவனின் நீண்டகால கோரிக்கை. ஆனால், அந்த வீடியோக்களை நான் பதிவிடவில்லை என்று திருமாவளவன் கூறிவிட்டார்.