சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. ஆளும் திமுக தேர்தல் அறிக்கை தயார் செய்ய எம்.பி.,கனிமொழி தலைமையில் ஒரு குழுவையும், தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் ஒரு குழுவையும் அமைத்துள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான உள்ள அதிமுகவும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடந்த அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டணி தொடர்பான முடிவுகளை தான் பார்த்துக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி கூறியதாக தகவல் வெளியானது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக வலுவான கூட்டணியை அமைக்க திட்டுள்ளதாகவும் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் முக்கிய வாக்கு வங்கியை கொண்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சி, திமுக, அதிமுக அல்லது பாஜக கூட்டணி என எந்தக் கூட்டணியில் இடம்பெறப்போகிறது என பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பான ஆலோசனை கூட்டம் சிறப்பு பொதுக்குழு கூட்டம் என்ற பெயரில் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் சென்னை ராணி மெய்யம்மை அரங்கத்தில் நடைபெற்றது. இதில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.