சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 15 நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபரகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், வேலூரில் வைத்து ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவை வழக்கறிஞர் அருள் சந்தித்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆம்ஸ்ட்ராங்கை விட்டு வைத்தால் உன் உயிருக்கு ஆபத்து வந்துவிடும் என அருள் பொன்னை பாலுவை மூளைச்சலவை செய்துள்ளார்.
அருள் கூறியதை நம்பியதால், ஆற்காடு சுரேஷின் தங்க பிரேஸ்லெட்டை ரூ.3.50 லட்சத்திற்கு விற்று, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய பொன்னை பாலு கூலிப்படையை தயார் செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், சம்போ செந்திலின் கூட்டாளியும், வழக்கறிஞருமான ஹரிகரன் கடந்த ஜூன் 14ஆம் தேதி வழக்கறிஞர் அருளை தொடர்பு கொண்டு பேசியதும், பணம் கைமாறியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. டெலிகிராம் செயலி மூலம் சம்போ செந்தில் வழக்கறிஞர் ஹரிகரனுக்கு உத்தரவுகளை தொடர்ந்து வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய கோடாரி ஒன்றை வழக்கறிஞர் அருள் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அருள் வாங்கிய கோடாரியை வைத்து தான் ஆம்ஸ்ட்ராங்கை கொடூரமாக வெட்டியதும், வாக்குமூலத்தின் மூலம் தெரிய வந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
கைது செய்யப்படும் போது ஹரிகரனிடம் சாதாரண செல்போன் ஒன்று மட்டுமே இருந்துள்ளது. பின்னர், அவர் வீட்டில் நடத்திய சோதனையில், ஸ்மார்ட் போன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த ஸ்மார்ட் போன் மூலமாக ஹரிகரன் - ரவுடி சம்போ செந்திலுடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள அஞ்சலை இந்த கொலைத் திட்டத்திற்கு முக்கிய காரணமாக இருந்ததும், அவர் மூலமே பணம், தங்குமிடங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்ததையடுத்து, போலீசார் அவரது வங்கிக் கணக்குகளை கைப்பற்றி தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.