தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தவெக மாநாட்டு திடலில் உயர்ந்து நிற்கும் காமராஜர், பெரியார், அம்பேத்கர்" -தமிழக அரசியல் களத்தில் விஜய் முன் வைக்கப்போகும் மாற்றம் என்ன?

காமராஜர், பெரியார், அம்பேத்கர் கட் அவுட்கள் வாயிலாக தவெக தலைவர் நடிகர் விஜய் பேசவரும் அரசியல் என்ன? புதிய கட்சியாக எந்த வகையில் தமிழக மக்களை ஈர்க்கப்போகிறார் என்பதை அலசுகிறது இந்த கட்டுரை.

தவெக மாநாட்டு முகப்பில் வைக்கப்பட்டுள்ள கட்அவுட்கள்
தவெக மாநாட்டு முகப்பில் வைக்கப்பட்டுள்ள கட்அவுட்கள் (Image credits-ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

சென்னை:நடிகர் விஜயின் தவெக கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியின் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாநாடு நடக்கும் இடத்தில் பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் கட் அவுட்கள் வைக்கப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது. இது குறித்து அலசுகிறது இந்த கட்டுரை.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை கடந்த பிப்ரவரி 2ஆம் தொடங்கினார். பின்னர், கட்சியின் கொடி மற்றும் பாடலை அறிமுகப்படுத்தினார். தவெகவின் முதல் மாநில மாநாடு 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாநாடு நடைபெறும் இடத்தில் பிரமாண்ட முன்னேற்பாடுகள் களைகட்டியுள்ளன.

மாநாட்டின் நுழைவாயில் கோட்டையின் மதில் சுவர் போன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் தவெக கொடியில் உள்ளதை போல 2 யானைகள் பிளிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேடையில் வெற்றிக் கொள்கை திருவிழா என்ற தலைப்பு இடம்பெற்றுள்ளது.
மேலும் மாநாட்டு திடலில் பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் பிரமாண்ட கட்அவுட்கள் இடம் பெற்றுள்ளன. இவர்களுக்கு நடுவே விஜயின் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.

விஜய் தன்னுடைய அரசியல் மாநாட்டில் அறிவிக்கப்போகும் கொள்கைகள் என்ன, அவருடைய அரசியல் பாதை எதை நோக்கி போகும் என அனைவரும் நினைத்திருக்கும் நிலையில் காமராஜர், பெரியார், அம்பேத்கர், பிரமாண்ட கட் அவுட் மூலமாக விஜய் பேசும் அரசியல் என்ன என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் ஈ டிவி பாரத் தமிழ்நாடு கேள்விகளை முன் வைத்தது.

மாநாட்டு பந்தல் முகப்பு (Image credits-ETV Bharat Tamil Nadu)

எந்த வகையில் தவெக சிறந்தது?: நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகரும், மூத்த பத்திரிகையாளருமான ப்ரியன், "விஜய்யை பொறுத்தவரை ஏற்கனவே பெரியார்,அம்பேத்கர்,காமராஜர் ஆகியோர் பற்றி படியுங்கள் என்று அறிவுறுத்தி உள்ளார். பெரியார் உள்ளிட்டோரின் கட் அவுட்கள் வைப்பதில் தவறு இல்லை.

இவை எல்லாம் குறித்து அவர் கட்சியை ஆரம்பித்ததில் இருந்தே பேசி இருக்க வேண்டும். தமிழகத்தில் ஏற்கனவே இருக்கின்ற கட்சியை விட புதிய கட்சியாக தமது கட்சி எதற்கு அவசியம் என்பதை கூற வேண்டாமா? மற்ற கட்சிகளை விட எந்த வகையில் நீங்கள் (விஜய்) சிறந்தவர், உங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என எப்படி கூற போகிறிர்கள்? தான் ஏன் கட்சியை ஆரம்பிக்க வேண்டிய அவசியம் வந்தது, இப்போது இருக்கிற கட்சிகள் மக்கள் நம்பிக்கையை ஏன் இழந்துள்ளது, நான் ( விஜய்) எப்படி நம்பிக்கை கொடுப்பேன்,அந்த விஷயத்தை சொல்லவேண்டிய கட்டாயம் உள்ளது.

இதையும் படிங்க :தடையில்லா இண்டர்நெட்.. தயாராகும் தவெக மாநாட்டுத் திடல்.. கவனம் ஈர்த்த கட்-அவுட்!

தலைவர்கள் வரலாற்றை தொண்டர்களுக்கு கூறுவது,தலைவர்கள் வகுத்த பாதையில் நடக்கவேண்டும் என கூறுவது எல்லாம் சரிதான். தலைவர்கள் படத்தை போட்டு தான் அனைவரும் அரசியல் கட்சியை தொடங்குகிறார்கள் ஆனால் யாருமே தலைவர்களின் வழியை பின்தொடர்வதில்லை. தமிழக அரசியலில் தலைவர்கள் கட்அவுட் வைப்பது ஒரு சடங்கு போல ஆகிவிட்டது. தமிழகத்தில் பெரியார்,காமராஜர், அம்பேத்கர் பெயரை சொல்லி வந்த கட்சி இங்கு இருக்கிறது இவர்களை விட நீங்கள் எந்த வகையில் சிறந்தவராக இருக்கிறீர்கள்? மற்றவர்கள் எந்தவகையில் தமிழகத்திற்கு தேவையில்லாமல் இருக்கிறார்கள்? என்பதை எந்த வகையில் கூற போகிறிர்கள் என்பதற்காக காத்திருக்கிறோம்.

தவெக தலைவர் விஜய் (Image credits-ETV Bharat Tamil Nadu)

எம்ஜிஆர், அண்ணா கட் அவுட்கள் வைக்காதது ஏன்?:தலைவர்கள் படத்தை கட் அவுட் வைப்பது ஒரு பக்கம் இருந்தாலும், தவெக கொடி ,பாடல் , வெளியீட்டில் அண்ணா, எம்ஜிஆர், படங்கள் நிழல் காட்சியாக காண்பிக்கபட்ட நிலையில் ஏன் கட்அவுட்டில் அவர்கள் படத்தை வைக்கவில்லை. அதிமுக,திமுக தலைவர்கள் கோபித்து கொள்வார்கள் என்பதால் வைக்கவில்லையா?
தவெக கொள்கை என்ன என்பதை குறித்து பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

பாஜக, அம்பேத்கரை அவர்களுடைய அரசியலுக்கு பயன்படுத்துகிறது. மோடி உள்ளிட்ட தலைவர்கள் அம்பேத்கரை புகழ்கிறார்கள், பாஜகவிற்க்கு பிடிக்கிறதோ இல்லையோ அம்பத்கரை பயன்படுத்துகிறார்கள். இப்போது விஜய் பயன்படுத்துவது மட்டும் என்ன பிரச்சனை வர போகிறது. பெரியார் படத்தையும் காமராஜர் படத்தையும் விஜய் பயன்படுத்துவது ஹெச் ராஜாவிற்க்கு பச்சைமிளகாய் சாப்பிட்டது போல இருக்கிறது. விஜய் தனக்கு பிடித்த தலைவர்களை பேனர்களில் போடுகிறார். அதற்காக அவருடை வேஷம் வெளுத்துவிட்டது என ஹெச் ராஜா எப்படி கூற முடியும். ஹெச்.ராஜாவுக்கு பிடிக்கும் என்பதற்காக மோடியின் படத்தையா அவர் வைக்க முடியும். பாஜக பக்கம் விஜய் திரும்பி பார்க்க மாட்டார் என அவர்கள் உணர்ந்துவிட்டார்கள். அதனால் கோபத்தில் பேசுகிறார்கள்.

அரசியல் கட்சி என்று தொடங்கி விட்டால், அடிமட்ட தொண்டர்களுடன் இறங்கி பழக வேண்டும். ஆனால், புதுச்சேரி நிர்வாகி மாநாடு வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில், அவருடைய மரணத்திற்கு துக்கம் விசாரிக்க நேரில் போகாமல் விஜய் தொலைபேசியில் விசாரிக்கிறார். அவருடைய அரசியலில் இவை எல்லாம் சரியாக வருமா என தெரியவில்லை.

முக்கிய விஷயங்கள் குறித்து விஜய் பேச வேண்டும்:மத்திய அரசு,மாநில அரசு பற்றிய தவெக கொள்கை என்ன என்பது குறித்து விஜய் பேசினால் தான் தெரியும். திராவிட பாதையில் தான் விஜய் போகிறார் என்றால் தமிழ்தாய் வாழ்த்து திராவிடம் என்ற வார்த்தையை தவிர்த்து விட்டு பாடப்பட்டதற்க்கு அவர் கண்டித்து இருக்க வேண்டுமே. ஆனால், அவர் கண்டிக்கவில்லை. சாதி வாரிக் கணக்கெடுப்பு எடுத்து அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது குறித்து பேசாமல் உள்ளார்.ஒரே நாடு ஒரே தேர்தல், வக்ஃபு போர்டு சட்டத்திருத்தம்,சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரத்தில் விஜய் தன்னுடைய பார்வை என்ன என்பது குறித்து அவர் கூற வேண்டும்.
சமூக நீதி,பெண்கள் முன்னேற்றம், மாநில அதிகாரம்,மத நல்லிணக்கம், இவை தான் அனைவரும் சொல்கின்றனர். இதையே விஜய் திருப்பி கூறினால் அதைதானே மற்ற கட்சிகள் கூறுகிறார்கள். என்ன புதிய விஷயத்தை விஜய் முன் வைக்க போகிறார் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இருக்கிற தலைவர்களிலிருந்து எப்படி மாறுபட்டுள்ள தலைவராக உள்ளேன் என்பதில்தான் அவரது வெற்றி அடங்கி இருக்கிறது.

என்னை ஏன் ஆதரிக்க வேண்டும் மற்றவர்களை ஏன் ஆதரிக்க கூடாது என்ற விளக்கத்தை கட்டாயம் அவர் (விஜய்) கூற வேண்டும். இதை சரியாக கூறினால் அரசியல் வெற்றி பெற வாய்ப்புள்ளது. சரியாக கூறவில்லை என்றால் பத்தோடு பதினொன்றாக இன்னொரு அரசியல் கட்சி தமிழகத்தில் வந்து இருக்கிறது என்று தான் மக்கள் பார்வை இருக்கும். மாற்றத்திற்கான கட்சியாக பார்க்கமாட்டார்கள்," என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details