விழுப்புரம்: தமிழ்நாட்டில் தற்போது விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளது. கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உயிரிழந்தார். எனவே, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் போதே இடைத்தேர்தல் நடத்தப்படும் அல்லது ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்து, இந்தியா முழுவதும் கடந்த ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்றைய தினம் வரை விக்கிரவாண்டி தொகுதி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு தான் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி உயிரிழந்தார். எனவே, தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற போது விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவில்லை என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மேலும், ஒரு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டால் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடத்த வருகின்ற அக்டோபர் மாதம் 7ஆம் தேதி வரை அவகாசம் இருக்கிறது. இருப்பினும் முன்னதாகவே தேர்தல் நடத்த முடிவு செய்தால் அதற்கான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தின் 51 கிராம ஊராட்சிகள், காணை ஊராட்சி ஒன்றியத்தின் 45 ஊராட்சிகள், கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தின் 7 ஊராட்சிகள், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 1 ஊராட்சி மற்றும் விக்கிரவாண்டி பேரூராட்சியை உள்ளடக்கியது.
விழுப்புரம் தாலுகா (பகுதி) நல்லாபாளையம், கடயம், கருவாட்சி, பனமலை, சின்னப்பநாயக்கன்பாளையம், சங்கீதமங்கலம், நங்காத்தூர், நகர், செஞ்சிபுதூர், செஞ்சி, குன்னத்தூர், திருநந்திபுரம், பிடாரிப்பட்டு, எண்ணாயிரம், பிரம்மதேசம், எஸ்.கொளப்பாக்கம், முட்டத்தூர், சலவனூர், வெள்ளையாம்பட்டு, குணிர்கணை, உடையாநத்தம், வெங்கமூர், அனுமந்தபுரம், திருக்குணம், அன்னியூர் ஆகிய கிராமங்கள் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இடம்பெற்றுள்ளது.
பெருங்கலாம்பூண்டி, கன்னந்தல், கலியாணம்பூண்டி, அரசலாபுரம், மண்டகப்பட்டு, ஈச்சங்குப்பம், எசாலம், தென்பேர், நந்திவாடி, நேஊர், மேல் காரணை, போரூர், அத்தியூர், திருக்கை, வெள்ளேரிப்பட்டு, சித்தேரி, ஏழுசெம்பொன், கொரலூர், வெங்கயாகுப்பம், நரசிங்கனுர், சின்னடச்சூர், கொங்கராம்பூண்டி, சாலை (விக்கரவாண்டி), குத்தாம்பூ ஆகிய கிராமப் பகுதிகளை கொண்டது விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி ஆகும்.
சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளதால் விக்கிரவாண்டியில் அதிகப்படியான உணவகங்கள் உள்ளன. மேலும் இத்தொகுதியில் சர்க்கரை ஆலை, சாராய ஆலை, குறு மின் உற்பத்தி நிலையம், ஒரு நூற்பாலை, நவீன அரிசி ஆலைகள், முண்டியம்பாக்கத்தில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தனியார் பொறியியல் கல்லுாரிகள் அமைந்துள்ளன. நெல், கரும்பு, விவசாயம் இங்கு பிரதான தொழிலாக செய்யப்பட்டு வருகிறது. 2021ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட தகவலின் படி விக்கிரவாண்டி தொகுதியில் 2,33,901 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்களில் ஆண் வாக்காளர்கள் 1,15,608, பேரும், பெண் வாக்காளர்கள் 1,18,268 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 25 பேரும் உள்ளனர். கடந்த 2007ஆம் ஆண்டு கண்டமங்கலம்(தனி ) தொகுதி கலைக்கப்பட்டு தொகுதி மறு சீரமைப்பில் விக்கிரவாண்டி தொகுதி உருவானது. கடந்த 2011 தேர்தலே இத்தொகுதிக்கு முதல் தேர்தலாகும். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராமமூர்த்தி (51.71% சதவித வாக்குகள்) அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் ராதாமணியை (41.93% சதவித வாக்குகள்) 14897 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பின்னர் ராமமூர்த்தி 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கு.இராதாமணி 6912 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனைதொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கு.இராதாமணி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.