சென்னை:நாட்டின் 18வது மக்களவைத் தேர்தல் நேற்றோடு ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதனையடுத்து, நாளை மறுநாள் (ஜூன் 4) நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளில் அனைத்து தேர்தல் அதிகாரிகளும் தீவிரம் காட்டி வருகின்றார்.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையில் சந்தேகம் இருந்தால், அதனை முறையாக விண்ணப்பித்து சந்தேகத்தை தீர்த்து கொள்ளலாம். முன்னதாக, உச்ச நீதிமன்ற உத்தரவுபடி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்கள் பரிசோதனை செய்ய உள்ளது. இதற்கான விரிவான நிர்வாக வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.
இதன்படி, மொத்தம் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 5 சதவீதம் இயந்திரங்களை பரிசோதனை செய்ய இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் வேட்பாளர்கள் அளிக்க வேண்டும்.