திருப்பத்தூர்:நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தியதையடுத்து, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி நகரங்களில் தோல் பொருட்கள் மற்றும் காலணி பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விற்பனையில் பெரும் பங்கு வகிக்கிறது.
நாட்டின் ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கும் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதி மக்கள் மாத வருமானம் பத்தாயிரம் ரூபாயில் தங்களது வாழ்க்கையை நடத்துகின்றனர். இதனிடையே, ஜிஎஸ்டியில் கோடிக்கணக்கில் மோசடி செய்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்து திருப்பத்தூரை அதிர வைத்துள்ளது. ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதியில் பெரும்பாலோனார் கிராம பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அடிப்படை கல்வி மற்றும் டிஜிட்டல் உலகத்திற்கு பழக்கமில்லாதவர்கள்.
இப்பகுதி மக்கள் தங்களது பிள்ளைகளின் கல்வி, திருமணச் செலவு, மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு வங்கிக்குச் சென்று பணத்தை எடுக்க முற்படும் நிலையில், உங்களது வங்கிக் கணக்கு நிறுத்தப்பட்டுள்ளது. உங்களது கணக்கில் கோடிக்கணக்கான ரூபாய் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இது அப்பகுதி மக்களிடையில் பெரும் அதிர்ச்சியயை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த தோல் தொழிற்சாலை பணியாளரின் மனைவியின் ஆவணங்களை சிலர் தவறாக பயன்படுத்தி 4.46 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூர் ஜட்ஜ் மனை பகுதியைச் சேர்ந்த நியாஸ் அஹமதின் மனைவி முபீனா பஜீலூர் ரஹ்மான் மௌலாவின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.4 கோடியே 46 லட்சத்து 23 ஆயிரத்து 496 வரி செலுத்த வேண்டும் என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. இது குறித்து ஜிஎஸ்டி வருமான வரித்துறை அதிகாரிகளிடம் விசாரித்துள்ளனர்.
அதில், முபீனா பஜீலூர் ரஹ்மான் மௌலா என்பவரின் பெயரில் உள்ள ஆதார் மற்றும் பான் கார்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி, MRK எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் போலியான நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் வரிஏய்ப்பு செய்துள்ளது தெரியவந்துள்ளது. தற்போது இந்த மோசடி குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளிக்க, ஆம்பூர் நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.