விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு கடந்த ஜுன் 10ஆம் தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து, ஜுன் 14 - 21ஆம் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.
அதில் 64 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பின்னர், 24ஆம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனையும், 26ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப்பெற கடைசி நாளும் அறிவிக்கப்பட்டது. மேலும், 35 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 29 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். மேலும், நாளை (ஜூலை10) வாக்குப்பதிவும், 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. வாக்குகள் எண்ணும் பணிகள் பனையபுரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 107 ஊராட்சிகளும், விக்கிரவாண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட 15 வார்டுகளில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 926 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 20 ஆயிரத்து 40 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 29 பேர் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் உள்ளனர்.