"இளைஞர்கள் அதிக நேரம் இயர்பட்ஸ் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்" - தஞ்சை மருத்துவக் கல்லூரி முதல்வர்! தஞ்சாவூர்: தொழில்நுட்பம் நம் வாழ்க்கையை பல விதங்களில் எளிமையாகவும், வசதியாகவும் மாற்றிவிட்டது என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை. ஆனால், இந்த தொழில்நுட்பத்தினை அதிகப்படியாக பயன்படுத்துவதால் நமக்கு பாதிப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
இக்கால கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தொழில் நுட்பத்திற்கு அடிமையாவதை நம்மால் பார்க்க முடிகிறது. குறிப்பாக செல்போன், இயர்பட்ஸை மாட்டிக்கொண்டு நடப்பது, இரவு நேரங்களில் இயர்பட்ஸ், ஹெட்போன்ஸ் மூலம் பாடல்களை கேட்டபடியே தூங்குவது போன்ற செயல்கள் வாழ்வின் ஒர் பகுதியாக மாறிவிட்டன.
இப்போதுள்ள இளைஞர்களில் அதிகமானோர் இயர்பட்ஸ், ஹெட்போன்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்துகையில் சத்தத்தை அதிகமாக வைத்து பயன்படுத்துகின்றனர். இதனால் காது கேட்கும் திறன் குறையும் எனவும், பிற்காலத்தில் காதுகேளாமைகளும் ஏற்படலாம் என எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம்.
இந்த நிலையில், இக்கால இளைஞர்கள் இயர்பட்ஸ் உள்ளிட்ட சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவதை தவிக்க வேண்டும் என கூறுகிறார், தஞ்சை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் பாலாஜிநாதன். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குழந்தைகள் பிறந்த உடனேயே அவர்களுக்கு நன்றாக காது கேட்கும் திறன் இருக்கிறதா என்பதை, மாவட்ட இடையீட்டு மையத்தின் மூலமாக பரிசோதனை செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் காது வால் நரம்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
இந்த அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் 10 லட்சம் ரூபாய் செலவில் செய்யப்படுகிறது. ஆனால், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடுத் திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சைகள் மூலம் சரிசெய்யபட முடியாத காது கேளாமை நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக காது கேட்கும் கருவி வழங்கப்படுகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த தலைமுறையினர் அதிகமாக இயர்பட்ஸ், ஹெட்போன்கள் போன்ற பொருட்களை பயன்படுத்துகின்றனர். இளைஞர்கள் அதிக நேரம் இயர்பட்ஸ் போன்ற சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதனால் காது கேளாமை போன்ற பிரச்னை ஏற்படுகிறது. மேலும், இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு.. மார்ச் 26-ல் நேர்காணல்!