சென்னை: திராவிடம் என்பது வெறும் சமூக நீதி மட்டும் அல்ல. சாதி, மதம் இல்லாத தமிழ் சமுதாயம் இந்த மண்ணில் இருந்தது. அந்த மாண்பை மீட்டெடுப்பது தான் திராவிடம் என திமுக எம்பி ஆ.ராசா குறிப்பிட்டார்.
திராவிடத்தின் அடையாளங்கள்: சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி திமுக சட்டத்துறை மூன்றாவது மாநில மாநாட்டை நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் திமுகவின் பொது செயலாளர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். திமுக சட்டத்துறை மாநாட்டில் திராவிடவியல் கருத்தரங்கில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா, "திராவிடத்தால் விளைந்த நன்மைகளை மறந்து விட்டு பேசுவோர் நடமாடும் இந்த நேரத்தில் திராவிடவியல் என்ற தலைப்பில் நான் பேச வந்துள்ளேன். ஒரு காலத்தில் நிலத்தால் திராவிடம் வரையறுக்கப்பட்டது. நிலத்தால் மொழியால் வரையறுக்கப்பட்ட திராவிடம் வாழ்ந்தது. பண்பாட்டில் நீர் துவங்கி உண்ணும் உணவு வரை திராவிடத்தின் அடையாளங்கள் இருந்து வருகின்றன.
திராவிடம் இல்லை என்று சொல்பவர்கள் ஆரியம் இல்லை என்று சொல்கிறார்களா? நிர்மலா சீதாராமன் வரை ஆரியம் இருப்பதை ஒப்புக்கொள்கிறார்கள். ஆரியம் என்ற வரலாற்றையும் பண்பாட்டையும் அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆக ஆரியம் இருக்கிற காரணத்தினால் திராவிடம் என்பது மறுக்கப்பட வேண்டுமா? ஆரியமும் திராவிடமும் இந்த மண்ணில் இரண்டு பண்பாட்டுக் கூறுகள் என்பதை வரலாற்று தரவுகளோடு உறுதிப்படுத்தியுள்ளனர். ஒரு பண்பாடு தமிழை அடிப்படையாகக் கொண்ட திராவிட பண்பாடு. மற்றொரு பண்பாடு சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட பண்பாடு.
சமத்துவம் பேசினால் திராவிடம்: பெரியாரை விமர்சிப்பதற்கு ஒரு நாணயம் வேண்டும். அந்த நாணயம் எதிர்த்தரப்பில் யாருக்கும் இல்லை. பெரியார் ஒரு ஆணாகப் பிறந்து பெண்ணுக்காக போராடியவர். முதலாளியாகப் பிறந்து தொழிலாளிக்கு போராடியவர். உயர்ந்த சாதியில் பிறந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடியவர் பெரியார். இப்படி ஒரு அடையாளத்தில் இந்தியாவில் இன்னொரு தலைவர் இல்லை. பெரியாரையும் அம்பேத்கரையும் நேர்கோட்டில் நிறுத்தாத யாரையும் மூளை உள்ளவராக கருதக்கூடாது. இப்போதைய காலகட்டத்தில் ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டால் ஆரியம். சமத்துவம் பேசினால் திராவிடம். பெண்ணுரிமை பேசினால் திராவிடம். பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பேசினால் ஆரியம். அறிவியல் பேசினால் திராவிடம். மூடநம்பிக்கை பேசினால் ஆரியம்.
திராவிடம் என்பது வெறும் சமூகநீதி மட்டும் அல்ல. சாதி, மதம் இல்லாத தமிழ் சமுதாயம் இந்த மண்ணில் இருந்தது. அந்த மாண்பை மீட்டெடுப்பது தான் திராவிடம். திராவிடம் என்பது மொழிக்கான பெருமையும் கூட. இந்த மொழி தான் சமத்துவம் பேசியது. இந்த மொழி தான் அறிவியல் பேசியது. இது சமஸ்கிருதத்தில் இல்லை. ஆரியத்தில் இல்லை. ஆரியத்தில் இல்லாத காரணத்தினால் இது திராவிட நெறி. இந்த திராவிட நெறிதான் எங்களுக்கு அடையாளம். இதுதான் திராவிடவியல்,"என்றார்.