சென்னை: குழந்தையை தாக்கியதாக பேருந்தில் பயணம் செய்த மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் மென் பொறியாளர் மீது, இரண்டு பெண்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து தாம்பரம் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் தனியார் மருத்துவமனையில் சிக்கிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தற்போது இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது
தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு நேற்று மாலை மாநகர பேருந்து (தடம் எண் - 500) புறப்பட்டு சென்றது. பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், மேற்கு வங்கத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை, கைக்குழந்தையுடன் வந்த ஒரு பெண்ணும், அவரது தாயும் திடீரென சரமாரியாக தாக்கியுள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக பயணிகளில் ஒரு பெண் தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு பெண்களிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதனால், அவரையும் அந்த இரண்டு பெண்கள் தாக்கியுள்ளனர். இதனால் பேருந்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, பேருந்து ஓட்டுநர் இரும்புலியூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி தகராறில் ஈடுபட்ட பெண்களை கீழே இறக்கியுள்ளார். அப்போது தாக்குதலுக்கு உள்ளான மேற்குவங்கத்தை சேர்ந்த பெண் கதறி அழுதுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் சுரேஷ், தாக்குதலுக்கு ஆளான பெண்ணுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து ஆறுதல் கூறி விசாரணை நடத்தியுள்ளார்.
அதில், தாக்கப்பட்ட அந்த பெண், தான் மேற்குவங்கத்தை சேர்ந்தவர் எனவும், மேடவாக்கம் பகுதியில் தங்கி பெருங்களத்தூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், பேருந்தில் ஏறி உட்கார்ந்த சில நிமிடங்களில் அந்த இரண்டு பெண்களும் அங்கு வந்து சீட்டில் துண்டு போட்டு பிடித்ததாகவும், தன்னை அங்கிருந்து எழுந்து செல்லும்படியும் கூறினர். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் குழந்தையை இடித்து விட்டாய் என கூறி கழுத்தை நெரித்து, தலைமுடியை இழுத்து, காலால் எட்டி உதைத்து தாக்கினர் என்று தெரிவித்துள்ளார்