தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வயநாட்டு நிலச்சரிவில் வனவிலங்குகள் தப்பியது எப்படி? மீட்புப் பணியில் இருந்தவரின் திகில் அனுபவங்கள்! - Wayanad landslide Rescue - WAYANAD LANDSLIDE RESCUE

Wayanad landslide Rescue: வயநாடு நிலச்சரிவு கேரள வரலாற்றில் இதுவரை காணாத வகையில் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மீட்புப்பணியில் இருந்த சவால்கள் குறித்து டெல்டா மீட்புக்குழுவின் தலைவர் ஈசனுடன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஆசிரியர் சங்கரநாராயணன் சுடலை நடத்திய கலந்துரையாடலைக் காணலாம்.

டெல்டா மீட்புக் குழு ஈசன்
டெல்டா மீட்புக் குழு ஈசன் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 10, 2024, 8:42 PM IST

கோயம்புத்தூர்/ஹைதராபாத்: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலச்சரிவு கேரள மக்கள் காலத்துக்கும் மறக்க முடியாத காயங்களை கொடுத்துச் சென்றிருக்கிறது. அதிகாரப்பூர்வ பலி எண்ணிக்கை அரசின் அறிவிப்பின் படி 225 ஆக உள்ள போதும், 400க்கும் மேற்பட்டோர் இந்த நிலச்சரிவில் உயிரிழந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மருத்துவமனைகளில் 420 உடல்களுக்கு உற்கூராய்வு நடத்தப்பட்டுள்ளது. 233 இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டுள்ளன. காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 131 பேரை தேடும்பணி இன்னமும் முண்டக்கை, சூரல்மலா, ஆட்டமலா மற்றும் பஞ்சிரிமட்டம் போன்ற பகுதிகளில் நடந்து வருகிறது. இந்நிலையில் மீட்புப்பணியில் பங்கெடுத்த கோவையைச் சேர்ந்த டெல்டா மீட்புக்குழுவின் தலைவர் ஈசன் ஈடிவி பாரத்துடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

யார் இந்த டெல்டா மீட்புக்குழு?: கடற்படையில் லெப்டினன்ட் கமாண்டண்ட் பணியாற்றிய ஈசன், அதிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பின்னர் டெல்டா மீட்புக்குழு என்ற பெயரில் குழுவை கட்டமைத்துள்ளார். இதில் பங்கெடுப்பவர்கள் பெரும்பாலும் முப்படைகளில் பணியாற்றும் அதிகாரிகள் தான். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) கீழ் இணைக்கப்பட்டுள்ள இந்த மீட்புக்குழு இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

வயநாடு மீட்புப்பணியிலிருந்து தற்போது கோவைக்கு திரும்பியுள்ள ஈசன் இது பற்றி பேசுகையில், வயநாடு எங்களுக்கு முதல் அனுபவம் கிடையாது, எங்கள் குழுவின் 19வது ஆபரேஷனாகும் என கூறினார். கேரளாவைப் பொறுத்தவரையிலும் இது எங்களின் 3 வது பணி. 2018ம் ஆண்டு வெள்ளத்தில் இருந்தோம், அப்போது மீட்புப்பணி மிகப்பெரிய அளவில் நடந்தது. பரந்து பட்ட இடங்களில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது என்பதை நினைவு கூர்ந்தார்.

இதோடு ஒப்பிட்டால் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடம் குறைவு என்றாலும் உயிருடன் இருப்பவர்களை மீட்பதற்கான வாய்ப்பு எங்கள் குழுவுக்கு கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவித்தார். எங்களுக்கு முன்பாகவே களத்திற்குச் சென்ற மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் ராணுவத்தினர் உயிருடன் பலரை மீட்டனர். ஆனால் எங்களால் உயிரற்ற உடல்களைத்தான் மீட்க முடிந்தது என அவர் கூறினார்.

வயநாட்டில் வித்தியாசமான நிலச்சரிவு:மற்ற நிலச்சரிவுகளைக் காட்டிலும் வயநாடு எந்த விதத்தில் வேறுபட்டது, அல்லது அபாயகரமாக இருந்தது என்ற கேள்வியை முன்வைத்தோம். இதற்கு பதிலளித்த அவர், "வயநாட்டில் தோண்டத் தோண்ட எங்களுக்கு கிடைத்தது உடல்கள் தான். ஆனாலும் ஒருவராவது உயிரோடு கிடைத்து விடமாட்டாரா என்ற எண்ணத்துடன் தேடினோம் ஆனால் பலன் கிடைக்கவில்லை. பொதுவாக நிலச்சரிவு போன்ற விஷயங்களில் ஏதேனும் பாக்கெட் போன்ற பகுதியில் சிக்கிக் கொள்வார்கள் , காயமில்லாமலோ, சிறிய காயத்தோடோ இருப்பவர்களை தோண்டி மீட்டெடுக்க முடியும். ஆனால் வயநாட்டில் அதற்கு வாய்ப்பே இல்லை, உடல்கள் சிதைந்து உறுப்புகள் தான்எங்களுக்கு கிடைத்தன" என கூறியது நிலச்சரிவின் கோரத்தை கண்முன் நிறுத்துவதாக இருந்தது.

கை தனியே, கால் தனியே , தலை தனியே என உடல் உறுப்புகள் கிடைத்தன என கூறும் அவர் இன்னும் கூறப்போனால் சில இடங்களில் உடல் உள்ளுறுப்புகள் சிதறிக்கிடந்தன. மக்கள் எங்களிடம் வந்து அங்கே ஒரு குடல் பகுதி (Intestine) இருக்கிறது வந்து தேடிப்பாருங்கள் என அழைத்தனர், அப்போதும் உயிரோடோ, முழு உடலாகவோ எங்களுக்கு கிடைக்கவில்லை என்றார்.

உடல்களை அடையாளம் காணப்பட்டது எப்படி: அரசுக்கு இருக்கும் சவாலே உயிரற்ற உடல்களை அடையாளம் காண்பது தான் என கூறிய அவர், நெயில் பாலிஷ், கைவிரல் மோதிரம் உள்ளிட்டவற்றைக் கொண்டும் சடலங்கள் அடையாளம் காணப்பட்டதை விவரித்தார். ஏன் இப்படி நடக்கிறது என கேள்வி கேட்டால் இதில் சந்தேகப்படுவதற்கு ஒன்றுமில்லை, பெரிய பாறைகள், பிரமாண்ட மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு தண்ணீரோடு சேர்ந்து வருகின்றன. இவை மனிதர்கள் மீது விழுந்தால் என்ன ஆகும் உடல் சிதறி தான் இறந்து போவார்கள். அடித்து வரப்பட்ட சில மரங்கள் 4 பேர் சேர்ந்தாலும் கட்டிப்பிடிக்க முடியாத அளவு பெரியதாக இருந்தன என நினைவு கூறும் அவர், வேரோடு கிடந்த அந்த மரங்களை அறுத்து அகற்றுவதே சவாலானதாக இருந்தது என்கிறார்.

தங்களின் மீட்பு அனுபவத்தின் போது எந்த வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததை தாங்கள் காணவில்லை என கூறும் அவர், இயற்கையோடு இயைந்த அறிவால் அவை தப்பிச் சென்றிருக்கலாம் என கூறுகிறார். வயநாடு என்றாலே யானைகளும், ராஜநாகங்களும் தான் என்ற நிலையில் மீட்புப் பணியின் போது இத்தகைய விலங்குகளின் சடலங்கள் ஏதும் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவும் ஈசன் கூறினார்.

இதையும் படிங்க:"வயிறு நிறைந்தது, மனசும் நிறைந்தது" வயநாட்டுக்காக நடந்த மொய் விருந்து!

ABOUT THE AUTHOR

...view details