தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"சூரிய ஒளி மின்சார ஒப்பந்தங்களை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்கவில்லை"-அதானி குழுமம் மறுப்பு

சூரிய ஒளி மின்சார ஒப்பந்தங்களை பெறுவதற்கு சாதகமாக லஞ்சம் கொடுக்கவில்லை என்று அதானி குழுமம் மறுத்துள்ளது. அமெரிக்க நீதித்துறை அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன் வைத்திருப்பதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

அதானி குழும தலைவர் கௌதம் அதானி
அதானி குழும தலைவர் கௌதம் அதானி (Image credits-ANI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 8 hours ago

புதுடெல்லி:சூரிய ஒளி மின்சார ஒப்பந்தங்களை பெறுவதற்கு சாதகமாக லஞ்சம் கொடுக்கவில்லை என்று அதானி குழுமம் மறுத்துள்ளது. அமெரிக்க நீதித்துறை அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன் வைத்திருப்பதாகவும் அனைத்து சட்டங்களுக்கும் இணங்க செயல்படும் நிறுவனமாக உள்ளதாகவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு: இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அதானி குழும செய்தித் தொடர்பாளர், அமெரிக்க நீதித்துறை, அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் ஆகியவை அதானி கிரீன் நிறுவன இயக்குநர்களுக்கு எதிராக வைத்துள்ள குற்றச்சாட்டுகளை மறுக்கின்றோம். அவை அடிப்படை ஆதாரமற்றவை. சாத்தியமான சட்டரீதியான வழிகளின் அடிப்படையில் இந்த விவகாரத்தை எதிர்கொள்வோம்.

அதானி குழுமம் எப்போதுமே உயர்ந்தபட்ச ஆளுகை, வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க கடமைப்பட்டிருக்கிறது. அதன் செயல்பாடுகளில் அனைத்து விதமான ஒழுங்குமுறை அமைப்புகளின் அனைத்து வரம்புகளையும் கடைபிடிக்கிறது. சட்டத்தை மதிக்கின்ற, அனைத்து விதமான சட்டங்களுக்கு இணங்க செயல்படும் குழுமம் என்பதை எங்களது கூட்டாண்மை நிறுவனங்கள், பங்குதாரர்கள், ஊழியர்களுக்கு உறுதிபட தெரிவித்துக் கொள்கின்றோம்.

முன்னதாக அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் வெளியிட்ட அறிக்கையில், "அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் டாலர் பத்திரங்களைத் தொடர வேண்டாம் என முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் நீதித் துறை மற்றும் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் ஆகியவை முறையே கௌதம் அதானி மற்றும் சாகர் அதானி மீது கிரிமினல் குற்றம் சாட்டியுள்ளது. இதன் காரணமாக, ஏற்கனவே முன்மொழியப்பட்ட அமெரிக்க டாலர் மதிப்பிலான பத்திரங்களைத் தொடர வேண்டாம் என்று எங்கள் துணை நிறுவனங்கள் தற்போது முடிவு செய்துள்ளன'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானி நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் இல்லை:இதனிடையே தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒவ்வொரு மாநிலமும் ஆண்டுதோறும் நுகர்கின்ற மொத்த மின்சாரத்தில் குறிப்பிடத்தக்க அளவு புதுப்பிக்கத்தக்க மின் சக்தியை பயன்படுத்த வேண்டும் தவறும் பட்சத்தில் அபராதம் செலுத்த வேண்டும் என்ற ஒன்றிய அரசின் விதியின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலமும் சூரிய ஒளி மினசாரத்தை வாங்க வேண்டியுள்ளது. அப்படி வாங்காதபட்சத்தில் பல்வேறு விதமான அழுத்தங்களை மாநில அரசுகளுக்கு உருவாக்குகிறது. இதன் அடிப்படையில், தமிழ்நாடு மின்சார வாரியம் 2000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்ய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI) என்ற ஒன்றிய அரசு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதையும் படிங்க :"மின் வாரியத்துக்கும் மத்திய அரசுக்கும் தான் தொடர்பு.. அதானி குழுமத்துடன் அல்ல!" - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

️தமிழ்நாட்டை பொறுத்த வரையிலும் திமுக ஆட்சி அமைந்த பிறகு அதானி நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு சூரிய மின்சாரம் தொடர்பாக எந்த நேரடித் தொடர்பிலும் இல்லை. ️அதிமுக ஆட்சியில் ஒரு யூனிட்டுக்கு 7.25 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் அதானி நிறுவனத்துடன் நேரடி ஒப்பந்தம் கையொப்பமிட்டது. ஆனால் கடந்த மூன்றாண்டுகளில் திமுக ஆட்சியில் திமுக அரசு அதானி நிறுவனத்துடன் எந்தவிதமான ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை. திமுக ஆட்சியில் SECI யுடன் மட்டுமே, அதுவும் ஒரு யூனிட்டுக்கு 2.61 ரூபாய் என தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்திருக்கிறது.

️தற்போதைய மாநில அரசின் அனைத்துவிதமான வரவு செலவும் SECI யுடன் மட்டுமே உள்ளது தவிர எந்தவிதமான தனிப்பட்ட நிறுவனங்களுடனும் இல்லை. ️தங்களின் மின் தேவைகளுக்காக மின்சாரத்தை விலை கொடுத்து வாங்கும் மாநில மின்வாரியங்களைக் கண்டறிந்து அவர்களுக்கு அதானி நிறுவனத்திடமிருந்து பெற்று மின்சாரத்தை விற்கும் புரோக்கராக SECI செயல்பட்டது என அமெரிக்க நீதிமன்றம் குறிப்பிடுகிறது.️ அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் இலஞ்சம் வழங்கியது என்றால் எந்த நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது என்பதைத்தான் விசாரிக்க வேண்டும்," எனக் கூறப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details