தேனி:தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணைக்கு மேல் மேற்குத் தொடர்ச்சி மலையின் அமைந்துள்ளது தமிழ்நாட்டின் மிக உயரமான அருவியான எலிவால் அருவி. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த ஒரு மாதங்களாக மழை பொய்யாததால் கொடைக்கானல் செல்லும் சாலையின் டம் டம் பாறை பகுதியின் எதிரே உள்ள எலிவால் அருவியில் முற்றிலும் நீர் வரத்து குறைந்து வற்றிக் காணப்பட்டது. இதனால் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் சென்றனர்.
இந்த நிலையில் நேற்று (செப்.27) மாலை மற்றும் இரவு நேரத்தில் எலிவால் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பெருமாள்மலை, சாமக்காடு, பாலமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக எலிவால் அருவிக்கு நீர் வரத்து துவங்கியுள்ளது. அதனால், அருவியில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.