கோயம்புத்தூர்:சாக்கடைகளில் ரோபோக்களை கொண்டு கழிவுகளை அகற்றும் முறையை செயல்படுத்த ஐஐடி உடன் இணைந்து பேசி வருவதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்க கூட்டரங்கில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "முதல்வரின் உத்தரவுக்கிணங்க கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆய்வு செய்து வருகிறோம். மழைக்காலங்களில் மேம்பாலங்களுக்கு அடியில் மழை நீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவிநாசி மேம்பாலத்தின் கீழ் தற்போது புதிய மோட்டார் மற்றும் புதிய வழித்தடம் அமைக்கப்பட்டு தண்ணீர் தேங்காத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.இதேபோல், லங்கா கார்னர் பாலத்தில் புதிய ஜெனரேட்டர் மற்றும் மோட்டார் அமைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மேம்பாலங்களின் அருகே சம்ப் அமைக்க இடம் கேட்டு ரயில்வே துறையிடம் கேட்டுள்ளோம். இடம் கிடைத்தால் புதிய சம்ப் அமைக்கப்பட்டு மழை நீர் உடனடியாக வெளியேற்றும் பணிகள் நடைபெறும். சிவானந்த காலணி ஏ.ஆர்.சி மேம்பாலத்தில் தண்ணீர் நேரடியாக பாலத்திற்கு செல்லாமல் மறுபுறம் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.கோவை மாநகரில் மேம்பாலங்களுக்கு அடியில் தேங்கும் மழை நீரை அகற்றுவதற்கு மோட்டார்கள் அமைக்கப்பட்டு உடனுக்குடன் மழை நீர் வெளியேற்றப்படுகிறது. அனைத்து பகுதிகளிலும் தூர்வாரி செப்பனிடப்பட்டதால் மழை நீர் தேங்காத வகையில் உள்ளது.
மேலும், சராசரி அளவை விட அதிகமாக மழை பெய்யும் போது தண்ணீர் தேங்குவதையும் தடுத்திட அந்தந்த பகுதிகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.