திருச்சி:கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 'கேந்திர வித்யாலயா' பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் 22 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில் நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
6 தங்கப் பதக்கம்:அதன் ஒரு பகுதியாக திருச்சி காவேரி ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இருந்து, கேந்திரிய வித்யாலயா பொன்மலை (திருச்சி) பள்ளியில் பயிலும் கிர்த்திகா மற்றும் பவதாரணி என்ற 2 மாணவிகள் பங்கேற்றனர். இதில் 17 வயதினருக்கான தடகள விளையாட்டு பிரிவில் 800 மீட்டர், 1500 மீட்டர், 4×100 மீட்டர் ரிலே ஆகிய 3 போட்டிகளில் தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவதாரணி. அதே போல் 14 வயதினருக்கான தடகள விளையாட்டு பிரிவில் 200 மீட்டர், 400 மீட்டர், 600 மீட்டர் ஆகிய 3 தடகள போட்டியில் தங்கம் வென்றுள்ளார் கிர்த்திகா.
மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு (Credits - ETV Bharat Tamil Nadu) உற்சாக வரவேற்பு:மொத்தமாக ஆறு தங்கப் பதக்கங்களை வென்று சொந்த ஊர் திரும்பிய மாணவிகளுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவிகள் இருவருக்கு மாலை மற்றும் பொன்னாடை போர்த்தி பலரும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இது குறித்து மாணவிகள் கூறியதாவது, "கோவையில் கடந்த ஜூன் மாதம் மண்டல அளவிலான போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பாக விளையாடினோம், இதனால் கேரளாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. இந்த போட்டியில் மொத்த 6 தங்க பதக்கங்களை வென்று உள்ளோம். இந்த வெற்றி உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் முனியாண்டி உள்ளிட்ட அணைவரைக்கும் நன்றி என்றனர். மேலும் வரவிருக்கும் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி பதங்கங்களை வெல்ல முயற்சி செய்வோம். எதிர்காலத்தில் இந்தியாவுக்காக விளையாடுவதே எங்களின் நோக்கம்" என்றனர்.
இதையும் படிங்க:முருகப்பா ஹாக்கி போட்டி: ஐஓசி-யை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது ரயில்வே அணி!
இந்த நிகழ்வில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவர் ஆர்.கோவிந்தராஜ், ரயில்வே துறை அலுவலக கண்காணிப்பாளரும் தேசிய தடகள விளையாட்டு வீரருமான தமிழரசன், தடகள பயிற்சியாளரும் அஞ்சல் துறை ஊழியருமான முனியாண்டி, அமிர்தம் அறக்கட்டளை தலைவர் யோகா விஜயகுமார், மாற்றம் அமைப்பின் நிறுவனத் தலைவரும் தேசிய மாநில அளவில் விருதுகள் பெற்ற குறும்படத்தின் நடிகரும் இயக்குனருமான ஆர்.ஏ.தாமஸ் மற்றும் திரளான விளையாட்டு வீரர்கள் பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.