ஈரோடு: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று (வெள்ளிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் ஆர்வமாக வாக்களித்து வந்தனர்.
அதில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியானது, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, குமாரபாளையம், தாராபுரம் மற்றும் காங்கேயம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. தேர்தலுக்காக ஈரோடு தொகுதியில் 1,688 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டது. நேற்று மாலையுடன் தேர்தல் வாக்குப்பதிவு முடிவு பெற்ற நிலையில், மொத்தம் 76.54 சதவீதம் ஓட்டுகள் ஈரோடு தொகுதியில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனத்தில், துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன், ஈரோடு அடுத்து சித்தோட்டில் உள்ள அரசு சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜ கோபால் சுன்கரா, தேர்தல் பொதுப் பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில், வாக்குச்சாவடி அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.