தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது! - ERODE EAST ASSEMBLY BY ELECTION

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், நேற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டன.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி
வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி (Image credits-Etv Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 4, 2025, 7:59 PM IST

ஈரோடு:ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப்.5) நடைபெற்று வரும் நிலையில், நேற்று (பிப்.5) வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டன. இந்த நிலையில் வாக்குப்பதிவு துவங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் சீல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் அகற்றப்பட்டன. 852 வாக்கு இயந்திரங்கள், 284- கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 308- சரி பார்ப்பு இயந்திரங்கள் பயன்படுத்தபட உள்ளன. இவை அனைத்தும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் துப்பாக்கி ஏந்திய சிஎஸ்எப் வீரர்களுடன் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அடங்கிய 33 வார்டுகளில் உள்ள 53 வாக்குப்பதிவு மையங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1,09,636 ஆண் வாக்காளர்களும், 1,16,760 பெண் வாக்காளர்களும், 37- மூன்றாம் பாலினத்தவர்களும் என 2,26,433 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் ஆவர். இடைத்தேர்தல் களத்தில் திமுக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள் என மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதையும் படிங்க:"ஏழைகளுடன் புகைப்படம் மட்டும் எடுத்துக் கொள்ளும் சிலரால் அவர்களின் வலியை உணர முடியாது" - நாடாளுமன்றத்தில் ராகுலை விமர்சித்த மோடி!

அனைத்து வாக்குப் பதிவு மையங்களிலும் வாக்காளா்கள் எளிதில் சென்று வாக்கு அளிக்கும் வகையில், அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்காளா்கள் வரிசையில் நிற்கும் போது வெயிலின் தாக்கம் ஏற்படாத வகையில் நிழற் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு மையங்களில் குடிநீா் வசதி, மின்விசிறி வசதி செய்யப்பட்டுள்ளது. மாற்றுதிறனாளிகள் எளிதாக சென்று வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடிகளில் சாய்தள வசதி அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது மருத்துவக் குழுவும் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

வாக்குசாவடிகளில் எந்த வித அசம்பாவிதமும் நடக்காத வகையில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனவே வாக்காளா்கள் அச்சமின்றி தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. இன்று நடைபெறும் வாக்குப்பதிவு பணியில் 1194 அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

துணை ராணுவ படையினர், காவல்துறையினர் என 2678 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 85- வயதுக்கும் மேற்பட்டவர்கள், வாக்குகளிக்க நேரில் வர முடியாத மாற்றுத்திறனாளி ஆகியோரின் வாக்குகள் படிவம் 12-டி மூலம் தபால் வாக்குகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதியில் 246 பேர் தபால் வாக்கு செலுத்தி உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details