ஈரோடு : இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர் வனப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரியவகை பறவை இனங்கள் உள்ளன. இவற்றில் பாறு கழுகுகள் மிக முக்கியமானவை. இந்தியாவில் ஒன்பது வகை பாறு கழுகுகள் உள்ளன. இதில், தமிழகத்தில் வெண் முதுகு பாறு கழுகு, கருங்கழுத்து பாறு கழுகு, செம்முகப் பாறு கழுகு ஆகிய 3 வகைகள் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் மாயாற்று சமவெளியில் காணப்படுகின்றன.
அண்மைக் காலமாக, பாறு கழுகுகள் புதிய இடங்களில் தென்பட ஆரம்பித்துள்ளன. சத்தியமங்கலம் நகரத்திற்கு அருகிலேயே புதுவடவள்ளி மற்றும் டி.என்.பாளையத்திலும் அண்மையில் தென்படுவதால் கழுகுகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. எண்ணிக்கை உயர்ந்து வருவதால் இவற்றை பாதுகாப்பதில் வனத்துறையினர் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.
கழுகுகளின் எண்ணிக்கை குறைய காரணம் :’டைக்குளோபினாக்’ எனும் கால்நடை மருந்து தான், இந்தியாவில் பாறு கழுகுகளின் எண்ணிக்கை குறைவுக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. ‘டைக்குளோபினாக்’ மருந்தை சாப்பிட்ட கால்நடைகள், இறந்த பின்பும் அதன் உடலில் இந்த மருந்து தங்கிவிடுவதால் இந்த கால்நடைகளை சாப்பிடும் கழுகுகள் இறந்துவிடுவதாக கூறப்படுகின்றன.
இந்த மருந்து கடந்த 1990 ஆம் ஆண்டு தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்ட சில ஆண்டுகளில் பாறு கழுகுகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கி 99 சதவீத கழுகு இனங்கள் அழிந்த தருவாயில், மருந்தை பயன்படுத்த அரசு தடை விதித்ததால் கழுகுகள் இறப்பு எண்ணிக்கை குறைந்தன.