தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விளையாட்டுத் திடல்கள் தனியாருக்கு டெண்டர் விட்டால் என்னவாகும்? மாமன்ற உறுப்பினர்கள் கூறுவது என்ன?

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு திடல்களை தனியாருக்கு டெண்டர் விடும் தீர்மானத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வாலிப சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருப்பதை குறித்த செய்தி தொகுப்பு..

மாநகராட்சி தீர்மானத்துக்கு எதிர்ப்பு
மாநகராட்சி தீர்மானத்துக்கு எதிர்ப்பு (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 6 hours ago

சென்னை:சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், சென்னை மாநகராட்சியின் கால்பந்து செயற்கை புல் விளையாட்டுத் திடல்களை தனியாருக்கு குத்தகைக்கு விட்டு, ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 120 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு கம்யூனிஸ்ட், விசிக, அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மைதானங்கள் தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டதால், விளையாடுவதற்கு மைதானம் இல்லாமல் போய்விடும் என்பதை சுட்டிக்காட்ட, சென்னை மாநகராட்சி வளாகத்தில் கால் பந்தை எடுத்து வந்து விளையாடினர்.

அப்போது, ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தியாளரிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்தனர்.

கவுன்சிலர் பிரியதர்ஷினி:98வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரியதர்ஷினி பேசுகையில், “சென்னை மாநகராட்சியில் எந்த திட்டத்தையும் தனியார் மயமாக்குவதை நாங்கள் எப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் தனியார் ஒப்பந்தத்திற்கு வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். தனியார்மயம் குறித்து நிலைக்குழு கூட்டம் முடிந்த நிலையில், அதற்கான பொருளை பெரும்பான்மையின் அடிப்படையில் நிறைவேற்றுவதாக தெரிவித்துள்ளனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், மைதானங்கள் தனியாருக்கு ஒப்பந்தம் விடும் பட்சத்தில், அதில் 60 சதவீதம் லாபம் தனியாருக்கும், 40 சதவீத லாபம் மட்டுமே சென்னை மாநகராட்சிக்கும் கிடைக்கும். இது குறித்து மாமன்றக் கூட்டத்தில் பேசும் பொழுது, அதற்கு பதில் அளித்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மைதானங்கள் மாநகராட்சியிடம் இருப்பதால் சரியாக பராமரிக்க முடியவில்லை எனவும், அந்த மைதானங்களில் வேறு சில நடவடிக்கைகளும் நடைபெறுகிறது. எனவே, அதை தடுக்கும் விதமாக அந்த மைதானங்களுக்கு ஒரு கட்டணம் நிர்ணயித்தால் அது போன்ற செயல்கள் இருக்காது என தெரிவித்தார்.

ஆனால், எங்களுடைய கருத்து என்னவென்றால், மைதானங்களைப் பராமரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் அதற்கான ஊழியர்களை நியமித்து, அதன் பணியைச் செய்ய வேண்டும். அதற்காக ஒரு கட்டணத்தை வசூலிப்பதற்காக, இந்த காரணத்தை தெரிவிக்கக் கூடாது. இது முற்றிலும் அடிதட்டு மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தனியார் மைதானங்களுக்கு கட்டணம் செலுத்தி விளையாட முடியாத சூழ்நிலை இருப்பதால் தான், சென்னை மாநகராட்சி மைதானத்தில் விளையாடி வந்தனர், ஆனால், தற்போது மாநகராட்சி மைதானத்திற்கும், பணம் செலுத்தி விளையாட வேண்டிய சூழல் இருப்பதால் மாணவர்களும், அடித்தட்டு மக்களுக்கும் பணம் செலுத்தி விளையாட முடியாத சூழலில் அவர்களின் விளையாட்டு திறன் பாதிக்கக்கூடும்'' என்றார்.

கவுன்சிலர் விமலா:41வது வார்டு மாமன்ற உறுப்பினர் விமலா பேசுகையில், சென்னை மாநகராட்சியில், குறிப்பாக வியாசர்பாடியின் முல்லை நகரைச் சேர்ந்த நந்தகுமார், மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் பயிற்சி எடுத்து தான் தேசிய கால்பந்து அணியின் முன்னணி வீரராக உள்ளார்.

அவருடைய தந்தை ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். மாநகராட்சி மைதானத்திற்கு கட்டணம் என நிர்ணயித்திருந்தால், நந்தகுமாரின் தந்தையால் கட்டணம் செலுத்த முடியாமல் இருந்து இருக்கும். நந்தகுமாரும் தேசிய விளையாட்டு வீரராக இருந்து இருக்கமாட்டார். இதுபோன்று அன்றாட பணி செய்பவர்களின் பிள்ளைகள் சென்னை மாநகராட்சி மைதானங்களில் இலவசமாக விளையாடினால் மட்டுமே அவர்களுடைய விளையாட்டை மேம்படுத்த முடியும்.

கட்டணம் செலுத்தி விளையாட வேண்டும் என்றால், அவர்களுடைய விளையாட்டு முழுவதுமே பாதிக்கப்படும். மேலும், ரூ.7,500 வரை ஒரு மாதத்திற்கு செலுத்த வேண்டிய சூழல் இருக்கும். அவர்களால் அதைச் செலுத்த முடியாது. குறிப்பாக, வடசென்னை பகுதி மக்கள் பயன்படுத்தும் விளையாட்டு மைதானங்களை தனியார் மயமாக்கப்பட்டால், அவர்களுடைய விளையாட்டு பாதிக்கப்பட்டு இளைஞர் சமுதாயம் வேறு வழியில் சீர்கெட வாய்ப்பு உள்ளது. கடந்த காலங்களில் அவர்களின் தவறான பாதைகளை மாற்றி, சில காலமாக தான் விளையாட்டுத் துறையில் கவனத்தைச் செலுத்த முயற்சித்து வருகிறோம்.

வட சென்னை இளைஞர்கள் சமீப காலமாக முன்னோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். மைதானங்களில் காலை முதல் இரவு வரை இலவசமாக பயிற்சி பெற்று வருகிறார்கள். கட்டணங்கள் வசூலிப்பதால் அவர்கள் பெரிய பின்னடைவைச் சந்தித்து தவறான பாதைக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அவருடைய வாழ்வாதாரத்தை கருதி மைதானங்களை பழைய முறைக்கு கொண்டு வர வேண்டும்'' என தெரிவித்தார்.

கவுன்சிலர் சரஸ்வதி: தொடர்ந்து பேசிய 123வது மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்கிறது. படிப்பதற்கான நேரம் அவர்களுக்கு கிடைக்கவில்லை, அவர்களுடன் இருப்பவர்கள் இந்த தீர்மானம் சாதாரண மக்களை பாதிக்கும் என அவர்களுக்கு தெரிவித்தால் நன்றாக இருக்கும். நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் துணை மேயர் பேசும் பொழுது, இந்த தீர்மானத்தை நிறுத்தி வைப்பதற்காக இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் பேசியதாகவும் தெரிவித்திருக்கிறார். இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தும் இந்த தீர்மானத்தை நிறுத்தி வைக்காமல் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அவர்கள் சொல்லியும் கேட்காத இந்த மாமன்றம் எப்படி செயல்படுகிறது என்பது யோசித்துப் பார்க்க வேண்டும்'' என அவர் கூறினார்.

வாலிப சங்கத்தினர் எதிர்ப்பு:முன்னதாக, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தத்து இந்திய ஜனநாயக வாலிப சங்கத்தினர் கீழ்பாக்கம் அம்மா பூங்கா வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ''சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட விளையாட்டு மைதானங்கள் தனியாருக்கு விடக்கூடாது எனவும், மக்களுடைய வரிப்பணத்தில் கட்டப்பட்ட மைதானத்தை, அரசு எப்படி தனியாருக்கு ஒப்பந்தத்திற்கு விடும் என கேள்வி எழுப்பினர். மேலும், தனியாருக்கு ஒப்பந்தம் விட்டு தான் அரசை நடத்த வேண்டிய தேவை இல்லை, எனவே மைதானங்களை தனியார் மயம் ஆக்குவதை கைவிட வேண்டும்'' என தெரிவித்தனர்.

அன்புமணி ராமதாஸ்: அதேபோல, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட விளையாட்டு மைதானங்கள் தனியாருக்கு விடக்கூடாது என்று அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், '' விளையாட்டுத் திடல்களை தனியாரிடம் ஒப்படைத்து, அங்கு விளையாடுவதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டால், ஏழை மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் விளையாட முடியாது. அது விளையாட்டுகளின் வீழ்ச்சிக்குத் தான் வழிவகுக்கும்'' என்றார்.

தமிழிசை சௌந்தரராஜன்:மேலும், இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், ''கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகர் அஜித்திற்கு வாழ்த்து சொல்லிவிட்டு, இங்கே சாமானிய மக்கள் விளையாடும் மாநகராட்சி விளையாட்டுத் திடல்களில் 10 பேர் பயிற்சி பெற்றால், ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,200 கட்ட வேண்டும் என மிக கொடுமையான தீர்மானத்தை மாநகராட்சி நிறைவேற்றி இருக்கிறது. சாமானிய மக்கள் பயன்பெறும் விளையாட்டு திடல்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது. போதையில் இருந்து குழந்தைகளை வெளியே கொண்டு வருவதற்கு விளையாட்டு அவசியம். சென்னை மாநகராட்சி உடனே இந்த முடிவை திரும்பப்பெற வேண்டும்'' என கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details