புதுக்கோட்டை:வேங்கைவயல் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னேற்றம் இல்லாமல் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வேங்கைவயல் விவகாரம்:மனித மலம் கலக்கப்பட்ட குடிநீர்த் தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை எடுத்து சந்தேகத்திற்கிடமான 31 நபர்களுக்கு இதுவரை டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சம்பவம் நடந்தபோது பகிரப்பட்ட வாட்ஸ் அப் ஆடியோவில் இருந்த குரல் பதிவுகளை சேகரித்து, அது யாருடைய குரல் என்பதை உறுதி செய்வதற்கு, குரல் மாதிரி பரிசோதனை நடத்த காவல்துறையினர் முடிவு செய்தனர்.
அதன்படி, இரண்டு பெண்கள் உட்பட 3 நபர்களுக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், சிபிசிஐடி காவல்துறையினருக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பகுப்பாய்வு:இந்நிலையில், சென்னை மயிலாப்பூர் தடய அறிவியல் துறை அலுவலகத்திற்கு புதுக்கோட்டை காவல்துறையினர் வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை அழைத்து வந்தனர். மூன்று பேரிடமும் தனித்தனியாக குரல் மாதிரி பதிவுகள் எடுக்கப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டது.
குரல் மாதிரி பரிசோதனை என்றால் என்ன?சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு தடயவியல் துறை அலுவலகத்தில் குரல் பகுப்பாய்வு செய்யப்படும். இதற்கு குரல் பகுப்பாய்வு முறை (voice analyzed) என்று பெயர். இதில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நபரை ஆய்வகத்திற்கு நேரில் வரவழைத்து அவரை வெவ்வேறு விதமாகவும், சம்பந்தப்பட்ட குற்றச் சம்பவத்தில் அவர் பேசியதாக கூறப்படும் பகுதியை எழுதிக் கொடுத்தும் பேசச் சொல்லி பதிவு செய்வார்கள். விதவிதமாக பேசச் சொல்லி குரல் மாதிரிகள் எடுக்கப்படும்.
குரல் மாதிரிகள் எடுக்கப்பட்ட பின், குரலின் அதிர்வின் அளவு, குரல் ஏற்ற இறக்கங்கள் அளவிடப்படும். ஒவ்வொரு குரலுக்கும் ஒரு வித்தியாசக் குறியீடு இருக்கும், அதை தடயவியல் அறிவியலாளர்கள் கண்டறிவார்கள். குறிப்பிட்ட நாட்களுக்குள் ஆய்வு செய்யப்பட்ட குரல் மாதிரியின் முடிவுகள், சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் நேரடியாக தடயவியல் துறை மூலம் அளிக்கப்படும். அந்த வகையில், வேங்கைவயல் விவகாரத்தில் இன்று காலை முதல் நடந்த குரல் மாதிரி பரிசோதனை நிறைவடைந்தது.
இதையும் படிங்க: தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024, கோவை தொகுதி: மும்முனைப் போட்டியில் முந்தப் போவது யார்? - LOK SABHA ELECTION 2024