சென்னை:பிப்.24ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவில் பிரிந்துள்ள அதிமுக தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் வீட்டிற்கு முன்பு ஜன.26-ல் வீடு கட்டி புதுமனை புகுவிழா நடத்தினார் சசிகலா. பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான பிப்.3ஆம் தேதி அதிமுகவினர் சார்பில் தமிழ்நாடெங்கும் உள்ள அண்ணாவின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அந்தவகையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான வி.கே.சசிகலா ஆகியோரது சந்திப்பு அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் பிப்.3-ல் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்தபோது நேருக்கு நேர் சந்தித்து உரையாடினர். அந்தவகையில், அண்ணாவின் நினைவிடத்தில் மரியாதை செய்து விட்டு கிளம்பிய ஓ.பன்னீர்செல்வம், சசிகலா வருவதை கண்டவுடன் காரிலிருந்து இறங்கி சென்று சசிகலாவை சந்தித்தார். அப்போது பேசிய சசிகலாவும், ஓபிஎஸும் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், அங்கு ஓபிஎஸின் அருகே சென்ற வைத்திலிங்கத்திடமும் சசிகலா நலம் விசாரித்தார்.