புதுக்கோட்டை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் பழனிசாமியை உள்ளடக்கிய அதிமுக ஒருங்கிணைப்பு நடந்துவிடும். அதிமுகவில் யாரையும் பிரிக்காமல் ஒன்றிணைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது என சசிகலா சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று (ஆக.30) ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திவாகரன் பேசியதாவது, “அதிமுகவும், பாஜகவும் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். வார்த்தை போரை தவிர்க்க வேண்டும். மக்கள் நலத்திட்டங்களை திமுக அரசு சரியாக செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், சட்டம் ஒழுங்கு பிரச்னையில் திமுக அரசு மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழக அரசியலில் தனி மனித தரமற்ற விமர்சனங்கள் செய்யப்படுகிறது. தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல் செய்ய வேண்டும். மற்ற நேரங்களில் அனைவரிடமும் சுமூகமாக இருக்க வேண்டும். ஒன்றிய அரசு என்று சொல்வது அதிருப்தியை ஏற்படுத்துகிறது. அதனால் தான் தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி போன்ற இயற்கை பேரிடருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.
மத்திய அரசுடன் 24 மணி நேரமும் திமுக மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதால் தான் தமிழகத்துக்கு நிதிகள் வருவதில்லை. மோதல் போக்கை கைவிட்டு நிர்வாக ரீதியாக சுமூகமான முறையை மாநில அரசு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மோதல்போக்கால் பாதிக்கப்படுவது மக்கள் தான். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே நடக்கும் போட்டியால் தன்னைப் போன்ற கல்வியாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.