விருதுநகர்:விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு ஏற்கெனவே இரண்டு முறை வெற்றி பெற்றவர் என்பதாலும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் நெருங்கி தொடர்பில் இருப்பவர் என்பதாலும் மீண்டும் இத்தொகுதியில் களமிறங்கிய மாணிக்கம் தாகூர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு தொகுதியில் பரவலாக நிலவியது.
ஆனால், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் களமிறங்கிய விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், மாணிக்கம் தாகூர் கடும் போட்டியாக இருந்தார். முதல்முறையாக தேர்தலில் களம் இறங்கிய இவருக்காக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர் இரவு பகல் பாராமல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தார். அதன் காரணமாக திருமங்கலம் தொகுதியில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளும், அருப்புக்கோட்டையில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளும் விஜயபிரபாகரனுக்கு கிடைத்தது.
ஆனால் சாத்தூர், திருப்பரங்குன்றம், சிவகாசி ஆகிய தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை குறைந்தது விஜய பிரபாகரனின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. சிவகாசியைப் பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சொந்த தொகுதி என்பதால் அங்கு விஜயபிரபாகரன் அதிக வாக்குகளை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு மாணிக்கம் தாகூரை விட விஜய பிரபாகரன் 13,580 வாக்குகள் குறைவாக பெற்றது அவரது தோல்விக்கு முக்கிய காரணமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் திமுக கூட்டணி சார்பில் மதிமுக, விசிக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம்,உள்ளிட்ட ஏராளமான தோழமைக் கட்சிகளின் வாக்குகள் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு சாதகமாக அமைந்தது.