விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியிலுள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், சிவகாசி காங்கிரஸ் எம்எல்ஏ அரசன் அசோகன், இஎஸ்ஐ மருத்துவமனையின் இணை இயக்குநர் டாக்டர்.அசோகன் தலைமையிலான மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு, மருத்துவமனை மேம்பாட்டிற்காக மருத்துவ உபகரணங்கள் மத்திய அரசின் நிதியிலிருந்து பெறுவது பற்றி ஆலோசித்து, அதற்குரிய நிதியை வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு பரிந்துரைக்க முடிவெடுக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்பி மாணிக்கம் தாகூர், "மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சிவகாசி இஎஸ்ஐ மருத்துவமனையின் தரம் மிகக்குறைந்த அளவில் உள்ளது. அரசு மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனையை தொடர்ந்து மத்திய அரசு வஞ்சித்து வரும் பார்வை மாற வேண்டும்.
சிவகாசி இஎஸ்ஐ மருத்துவமனையின் தரம் உயர்த்தப்பட வேண்டுமென வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம். தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் முதலமைச்சரின் நேரடி பார்வையிலுள்ள காவல் துறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாமல் காவல்துறையின் பணி சிறப்பாக உள்ளது.
இருந்த போதிலும், தமிழக காவல் துறையை மென்மேலும் மேம்படுத்த வேண்டுமென்பதை வலியுறுத்துவோம். எந்த ஒரு முதலமைச்சரின் வெளிநாட்டு பயணமும் அந்தந்த மாநிலங்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும். தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு முதலீட்டு பயணம் தென் மாவட்டங்களை புறக்கணிக்காமல் தொழில்களை பெற்றுத் தர வேண்டும்.
இதையும் படிங்க :“நான் ஜிலேபி சாப்பிடவில்லை..” அன்னபூர்ணா விவகாரத்தில் வானதி சீனிவாசன் விளக்கம்! - annapoorna owner apologizes issue
ஜிஎஸ்டி விவகாரம் : ஜிஎஸ்டி வரி குறித்து கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்தது ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்ட மத்திய அரசின் அகங்காரத்தின் அடுத்த நிலை. இந்த செயல்பாடு இந்தியா முழுவதும் உள்ள ஜிஎஸ்டி வரி கட்டும் தொழில் முனைவோர்களை மிரட்டுவதற்கான ஆதாரமாகவே கருதுகிறோம்.