விருதுநகர்:சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட கோர வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து, விதிகளை மீறும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்டோர் மீது குண்டாஸ் பாயும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம், திருத்தங்கல் வருவாய் கிராமம் உட்கடை செங்கமலப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுதர்சன் பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு தொழிற்சாலையில் 09.05.2024 மதியம் சுமார் 02.15 மணியளவில் ஏற்பட்ட வெடிவிபத்தானது.
தொழிற்சாலை பல நபர்களுக்கு உள்குத்தகை விடப்பட்டிருந்ததாலும், நிர்ணயிக்கப்பட்ட அளவினைவிட அதிகமான அளவில் இரசாயன மூலப்பொருட்கள் மற்றும் தொழிலாளர்களை பயன்படுத்தியதாலும், பேன்சி இரக பட்டாசு தயாரிப்பதற்கான போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் பாதுகாப்பற்ற முறையில் பேன்சி இரக பட்டாசுகள் உற்பத்தி செய்தது, அனுமதிக்கப்பட்ட அறைகளில் பட்டாசு உற்பத்தி செய்யாமல் மரத்தடியில் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டது போன்ற பல விதிமீறல்களின் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது.
ஒரு ஆண்டு கழித்து இந்த தொழிற்சாலை மீண்டும் தொடங்கப்பட்டது. வெடிவிபத்து குறித்து காவல்துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொழிற்சாலையின் உரிமதாரர், போர்மேன் மற்றும் உள்குத்தகைக்கு எடுத்தவர் மூன்று நபர்களின் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, இதே போன்று சட்டத்திற்கு புறம்பான வழிகளில் விதிகளை மீறி பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்ட சிவகாசி வட்டம், வெள்ளுர் கிராமத்தை சோந்த மகேஸ்வரன் என்பவர் மீது கடந்த மார்ச் மாதத்தில் குண்டர் தடுப்புசட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் அவர்களால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, அனுமதியின்றி உள்வாடகை மற்றும் உள்குத்தகை மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவினை விட கூடுதலாக இரசாயனங்கள் மற்றும் தொழிலாளர்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகளின் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சட்டத்திற்கு புறம்பான வழிகளில் விதிகளை மீறி பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் உரிமதாரர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருக்கும் போர்மேன் ஆகியோர்கள் மீது குற்ற வழக்குகளின் கீழும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உரிமதாரர்கள் தங்களது பட்டாசு தொழிற்சாலைகளை விதிமுறைகளுக்கு முரணாக வேறு நபர்களுக்கு அனுமதியின்றி உள்குத்தகை மற்றும் உள்வாடகைக்கு விடக்கூடாது. அவ்வாறு உள்குத்தகை மற்றும் உள்வாடகைக்கு விடப்படுவதாக ஆய்வின் போது கண்டறியப்பட்டால், மேற்படி பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்களின் மீதும், உள்குத்தகை நடவடிக்கையில் ஈடுபடுவோர்களின் மீதும் கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.