விருதுநகர்:இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் உள்ள கீழ முடிமன்னார் கோட்டையை சேர்ந்தவர் பெருமாள்சாமி (35). இவர் அருப்புக்கோட்டை - சாயல்குடி சாலையில் அமைந்துள்ள மண்டபசாலை அருகே பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இங்கு கமுதி, கீழ ராமநதியை சேர்ந்த செந்தில்குமார் மேனேஜராகவும், காளையார் கரிசல்குளத்தைச் சேர்ந்த பிரவீன்ராஜ், கீழ முடிமன்னார் கோட்டையை சேர்ந்த முருகேசன் உள்பட நான்கிற்கும் மேற்பட்ட நபர்கள் ஊழியர்களாகவும் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் பெருமாள்சாமியின் தந்தை சர்க்கரை நாயக்கர் நவதானிய வியாபாரம் செய்துவரும் நிலையில் தொழில் நேரம் போக பெட்ரோல் பங்கில் விற்பனையை கவனித்து வந்துள்ளார். பெட்ரோல் விற்பனை செய்த பணத்தை பங்கில் உள்ள அறை லாக்கரில் வைப்பது வழக்கம்.
மேலும் அறையின் லாக்கர் சாவியானது சர்க்கரை நாயக்கர் வசம் இருந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் பங்க் அறை லாக்கரில் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கப்பணம் திடீரென காணாமல் போனது குறித்து பங்க் ஊழியர்களிடம் சர்க்கரை நாயக்கர் கேட்டுள்ளார். அதற்கு தங்களுக்கு எதுவும் தெரியாதென ஊழியர்கள் கூறியுள்ளனர். அப்போது பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்த ஊழியரான பிரவீன்ராஜ் திடீரென வேலையை விட்டு நின்றதாக தெரிய வருகிறது.
இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் கடைசியில் பிரவீன்ராஜ் மீண்டும் பெட்ரோல் பங்கில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் பெட்ரோல் பங்கில் மீண்டும் அடிக்கடி பணம் திருடு போவது தொடர் கதையாகி வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த சர்க்கரை நாயக்கர் பங்கில் இருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்துள்ளார்.