தஞ்சாவூர்:இந்தியா முழுவதும் இன்று (செப்டம்பர் 7) விநாயகர் சதுர்த்தி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயக சதுர்த்தி என்பது இந்துக்களின் முக்கியமான விழாக்களுள் ஒன்று. இந்நிலையில் இந்த இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்தநாளாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் தஞ்சாவூரில் உள்ள கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயிலில் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இதில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் விநாயகப்பெருமான் அருள்பாலிப்பார். அதுபோலவே இந்த ஆண்டும் இவ்விழா கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்கியது.
மேலும் நாளை( செப்.10) நிறைவு பெறவுள்ளது. இந்நிலையில் இன்று உற்சவர் உச்சிப்பிள்ளையார் விசேஷ அலங்காரத்தில் மூசிகவாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக நாதஸ்வர மேள தாளம் முழங்க காவிரியாற்றின் பகவத்படித்துறைக்கு எழுந்தருளினார். பின் அங்கு விநாயகப்பெருமானின் அஸ்திர தேவருக்கு, எண்ணெய் காப்பு சாற்றி, மாப்பொடி, திரவியப்பொடி, மஞ்சள்பொடி, பால், தேன், பஞ்சாமிர்தம், தயிர் சந்தனம் முதலிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பிறகு, சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் கூறி அஸ்திர தேவரை சுமந்தபடி காவிரியாற்றில் இறங்கி மும்முறை ஆற்று நீரில் அஸ்திரதேவருடன் முங்கி எழ, விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை செய்யப்பட்டு மீண்டும் அஸ்திரதேவருடன் உற்சவ விநாயகப்பெருமான் முக்கிய வீதிகள் வழியாக உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு புறப்பட்டார் இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.