சென்னை:இந்தியா முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் விநாயகர் சிலை வழிபாடானது துவங்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் சென்னை சிஐடி நகரில் வித்தியாசமான முறையில் பாதுஷா செய்யக்கூடிய மூலப் பொருட்களால் விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கற்பூர தீபாரதனை காடப்பட்டது. இந்த விநாயகர் சிலை குறித்து அப்பகுதியை சேர்ந்த பாலு கூறுகையில், “ வருடந்தோறும் இந்த இடத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகிறோம். கடந்த வருடம் விநாயகர் சிலையை மைசூர் பாகுவால் செய்தோம். இந்த வருடம் பாதுஷா செய்வதற்கு தேவையான உணவுப்பொருட்களை வைத்து செய்துள்ளோம்.
இந்த விநாயகர் சிலை 250 கிலோ உணவுப்பொருட்களால் உருவாக்கப்பட்டது. சர்க்கரை, மைதா, முந்திரி, திராட்சை, நிலக்கடலை, பொட்டுக்கடலை, இனிப்பு பாகு, செரி பழம் ஆகிய பொருட்களை வைத்து செய்துள்ளோம். விநாயகர் சிலையின் உயரமானது 9 அடி அளவிலும், பீடத்தோடு சேர்த்து மொத்தம் 12 அடி அளவிலும் செய்தோம். விநாயகரின் சிலையின் பின்பு கரும்பை வைத்து அலங்கரித்துள்ளோம்” என்றார்.