தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெள்ளநீரில் தத்தளிக்கும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்.. "தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம்!" - VILUPPURAM FLOOD

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் வெள்ளநீரில் தத்தளிக்கும் நிலையில், வெள்ளநீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நகராட்சி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளநீரில் மூழ்கிய விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்
வெள்ளநீரில் மூழ்கிய விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2024, 6:51 PM IST

விழுப்புரம்: வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மையமாக உருவெடுத்ததால் தமிழ்நாட்டின் வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதிலும் குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதுவரை கண்டிராத மழையை சந்திக்கக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தென்மாவட்டங்களுக்கும், தலைநகர் சென்னைக்கும் வரும் அனைத்து பேருந்துகளும் வந்து செல்லும் முக்கிய பேருந்து நிலையமான விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் நான்கு நாட்களாக தண்ணீரில் மூழ்கி பேருந்துகள் உள்ளே செல்ல முடியாத அவலநிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் நீதிமன்றத்தின் அருகிலேயே அமைந்துள்ள இந்த பேருந்து நிலையத்தில் மழைநீர் வெளியேறுவதற்கான சரிவர வசதிகள் செய்து தரப்படாமல் உள்ளன. இந்த பேருந்து நிலையமானது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் கடந்த 2000 ஆண்டு திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளநீர் சூழ்ந்துள்ள விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் (Credits - ETV Bharat Tamil Nadu)

மேலும், ஒவ்வொரு மழையின்போதும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தண்ணீர் வெளியேறாமல் பொதுமக்களும், பேருந்து பணியாளர்களும் சிரமத்திற்கு உள்ளாகும் அவலநிலை தொடர்ந்து நீடித்து வருவதாக குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து எழுந்து வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்.. சசிகலா கொடுத்த நிவாரணப் பொருட்களுக்கு அடித்து கொண்ட கிராம மக்கள்!

இந்த நிலையில், தற்போது மாவட்டத்தின் முக்கிய பகுதியில் இருந்து வரும் அரசு மற்றும் பிற தனியார் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல் சாலையில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தப் புயலுக்கு பிறகாவது விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் முழுமையாக கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சீர் செய்யப்படுமா? என்பது விழுப்புரம் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

புதிய திட்டம்: இத்தகைய சூழ்நிலையில், இதுகுறித்து நகராட்சி துறை தரப்பில் கூறும்போது, "விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வளாகம், விழுப்புரம் புறவழிச்சாலை ஆகியவற்றில் இருந்து வரக்கூடிய தண்ணீர் புதிய பேருந்து நிலையத்தில் நுழைகிறது. இந்த நீர் வரும்போது வெளியேற்றும் வகையில் புதிதாக வடிகால் அமைத்து அருகிலுள்ள ஏரியில் விடுவதற்கு புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டும் அல்லாது, விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (டிச.03) இரவு ஏழு மணி முதல் பேருந்துகள் உள்ளே சென்று வெளியே வருவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு, தேங்கியுள்ள தண்ணீரை வடிக்கும் பணிகள் மிக துரிதமாக நடைபெற்று வருகிறது." என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details