விழுப்புரம்:விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கும் இ-சேவை மையத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருபவர் பழனிவேல். இவருடைய மனைவி சிவசங்கரி. இந்த தம்பதியின் மகள் மூன்றரை வயது நிரம்பிய லியா லட்சுமி.
இந்த சிறுமி விக்கிரவாண்டி காவல் நிலையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக்குலேசன் உயர்நிலைப்பள்ளியில் எல்கேஜி வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்றைய தினம் (ஜவனரி 3) வழக்கம் போல குழந்தையை பள்ளியில் விட்டு விட்டு தன்னுடைய வேலைக்காக சென்றுள்ளார் தந்தை பழனிவேல்.
இந்நிலையில், மதியம் 1.45 மணி அளவில் சிறுநீர் கழிக்கச் செல்வதாகக் கூறிஆசிரியரிடம் சொல்லிவிட்டு பள்ளி வகுப்பறையின் அருகே உள்ள கழிப்பறைக்கு சிறுமி சென்றதாக கூறப்படுகிறது. பின் நீண்ட நேரம் ஆகியும் குழந்தை மீண்டும் திரும்ப வரவில்லை என்பதால் ஆசிரியைக்கு சந்தேகம் எழுந்ததாகவும், இதையடுத்து ஆசிரியர்கள் கழிவறை அருகே சென்று தேடியதாகவும் தெரிகிறது.
அப்போது அங்கு இருந்த செப்டிக் டேங்க் மீது போடப்பட்டு இருந்த இரும்பு மூடி உடைந்து காணப்பட்டதாகவும், ஒரு வேளை குழந்தை செப்டிங் டேங்கிற்குள் விழுந்து இருக்கலாம் என்று சந்தேகித்தில் பள்ளியில் ஓட்டுநராக வேலை செய்யும் கோபாலை அழைத்து செப்டிக் டேங்கில் தேடி கூறியுள்ளனர்.
இது குறித்து பேசிய பள்ளியின் ஓட்டுநர் கோபால், “ஆசிரியர் குழந்தையை காணவில்லை என கூறி தேடி வந்தனர். அப்போது செப்டிக் டேங்க் மூடி உடைந்திருக்கிறது என்று ஆசிரியர்கள் கூறியதால், அதற்குள் குழந்தை விழுந்துவிட்டதா? என எட்டிப் பார்த்தேன். அங்கு குழந்தையின் ஷூ தெரிந்தது. அதன் பிறகு அருகே கிடந்த கம்பியை வளைத்து அதன் மூலம் குழந்தையின் ஆடையை பிடித்து குழந்தையை மேலே தூக்கினேன். அதன் பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்" என்றார். செப்டிக் டேங்கின் இரும்பு மூடி துருப்பிடித்து இருந்ததால் அது இற்றுப் போய் இருந்ததாகவும் கோபால் கூறினார்.
இந்நிலையில், சிறுமியின் தந்தை பழனிவேல் மருத்துவமனையில் தனது குழந்தையின் உடலை கட்டி அணைத்து, "எழுந்திருமா! அப்பா கூட வீட்டுக்கு வந்துருமா" என கண்ணீர்விடும் காட்சிகள் பார்ப்பவர்களின் மனதை சோகத்தில் ஆழ்த்துகிறது.
இது குறித்து குழந்தையின் தந்தை பழனிவேல், “என் குழந்தை இயற்கையான முறையில் இறக்கவில்லை. என் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளது” என விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். செப்டிக் டேங்க் அருகே கிடந்த குழந்தையின் உள்ளாடை நனையாமல் காய்ந்த நிலையில் இருந்தது குறித்தும் பெற்றோர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
புகாரின் அடிப்படையில் விக்கிரவாண்டி காவல் நிலைய காவல்துறையினர் சந்தேகம் மரணம், பணியில் நிர்வாக கவன குறைவு ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல்ஸ் ஆகிய மூவரையும் நள்ளிரவு 2 மணிக்கு கைது செய்து விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
குழந்தையின் உடல் இன்று காலை முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உடல் அஞ்சலிகாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று (ஜவனரி 3) பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள், அப்பகுதி மக்கள் விழுப்புரம் - சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதையும் படிங்க:விக்கிரவாண்டியில் எல்கேஜி சிறுமி உயிரிழப்பு.. வெளியானது சிசிடிவி காட்சி!
அந்த போராட்டத்தில் பேசிய அதே பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவரின் தாய் சத்யா, "எல்.கே.ஜி குழந்தைகள் இயற்கை உபாதைகளுக்கு வெளியே செல்லும்போது ஒரு ஆயாம்மா உடன் செல்ல வேண்டும். ஏன் யாரும் செல்லவில்லை?. குழந்தை விழுந்து அவ்வளவு நேரமாகியும் ஆசிரியர்கள் அவரை தேடாமல் அஜாக்கிரதையாக உள்ளனர். பள்ளியில் கட்டணம் வசூலித்தால் மட்டும் போதுமா? பாதுகாப்பு இல்லையா? பிள்ளைக்கு எதாவது ஒன்று என்றால் முதலில் எங்களிடம், பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் கூறியிருக்க வேண்டும். அவர்களை நம்பிதான் நாங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம்," என்றார்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்ட பள்ளி மாணவர் ஒருவரின் தந்தை கூறுப்போது, "மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் 6 மாதத்திற்கு ஒரு முறை பள்ளியை வந்து ஆய்வு செய்ய வேண்டும். அதுவும், இளஞ்சிறார்கள் பயிலும் இப்பள்ளியில் ஆய்வினை சரிவர மேற்கொள்ளவில்லையா? அல்லது பள்ளியை தினசரி சுத்தம் செய்யும் துப்புரவு ஊழியர்கள் மேற்கண்ட கழிவு நீர் தொட்டியின் மூடியின் தரத்தைப் பற்றி பள்ளி நிர்வாகத்திடம் கூறிவில்லை, அல்லது கூறியும் அதனை பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருந்ததா? என தெரியவில்லை. இது குறித்து பள்ளி நிர்வாகம் பதிலளிக்க வேண்டும்," என்றார்.