தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு.. காவல் ஆய்வாளருக்கு ஜூலை 31 வரை சிறை! - MR VIJAYABHASKAR CASE - MR VIJAYABHASKAR CASE

Karur Land Scam Case: கரூரில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் நேற்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பிருத்விராஜ் கைது
பிருத்விராஜ் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 17, 2024, 9:24 PM IST

கரூர்: கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் Non Traceable Certificate பெறப்பட்டு, அந்த சான்றிதழ் மூலம் பத்திரப்பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து நிலத்தின் உரிமையாளர் பிரகாஷ் அளித்த புகாரின் அடிப்படையில், மேலக்கரூர் சார் பதிவாளர் முகமது அப்துல் காதர், வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் பிருத்விராஜை விசாரித்த போது, அவர் சரியாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த சார்பதிவாளர், கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில், வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த பிருத்விராஜ் தற்போது தாம்பரம் காவல் நிலையத்திற்கு டிரான்ஸ்பர் வாங்கிச் சென்றுள்ளார். பின்னர், பணியில் சேராமல் வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என அறிந்து கொண்டு தலைமறைவாக இருந்துள்ளார். ஆனால், இதுவரை அவர் தாம்பரம் காவல் நிலையத்தில் பொறுப்பேற்காத நிலையில், இன்று அவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு காவல் ஆய்வாளராக பிருத்விராஜ் கரூர் நகர காவல் நிலையத்தில் பணியாற்றிய போது, எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது அமைச்சருக்கும், பிருத்விராஜுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் தான் வில்லிவாக்கம் காவல் நிலையத்தை தேர்வு செய்து, அங்கு Non Traceable Certificate பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காவல் ஆய்வாளர் பிருத்விராஜை கைது செய்த சிபிசிஐடி போலீசார், இன்று கரூர் திண்ணப்பா நகர் பகுதியில் அமைந்துள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டு, சுமார் 6 மணி நேரமாக விசாரணை மேற்கொண்டனர்.

அதன்பிறகு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து வந்தனர். பின்னர் மறுபடியும் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று மாலை 3 மணியளவில் கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் ஆஜர்படுத்தினர்.

பின்னர், நீதிபதி பரத் குமார், காவல் ஆய்வாளர் பிருத்விராஜை சேலம் மத்திய சிறையில் ஜூலை 31ஆம் தேதி வரை அடைக்க உத்தரவிட்டார். ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் நேற்று எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் பிரகாஷின் உறவினர் பிரவீன் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று அதே வழக்கில் காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அமலாக்கத்துறை விசாரணைக்கு ஜாபர் சாதிக் சகோதரர் நேரில் ஆஜர்? நடப்பது என்ன? - Jaffer Sadiq Case

ABOUT THE AUTHOR

...view details