தேனி:தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே முத்தலாம்பாறை ஊராட்சிக்குட்பட்ட உப்புத்துறை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால், ஆற்று நீர் செல்லும் ஓடை வழியாக உடல்களை சுமந்து சென்று அடக்கம் செய்து வந்தனர். ஓடையில் தண்ணீர் அதிகம் வந்தால் உடலை அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.
இதனால் மயானத்திற்கு செல்ல பாதை வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து ஆட்சியரின் உத்தரவின் பேரில், வருவாய் அலுவலர்கள் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டெடுத்து மயானத்திற்கு பாதை அமைத்துக் கொடுத்தனர்.
இந்நிலையில் மயானத்திற்கு செல்லும் பாதையை அதே பகுதியைச் சேர்ந்த சில நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து பாதையை அடைத்து வைத்துள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். இதனால், மீண்டும் பொதுப் பாதையை பயன்படுத்த முடியாமல் ஓடை வழியாக செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து வருவாய் அலுவலர்களிடம் புகார் தெரிவித்தால் உடலை அடக்கம் செய்யும் நேரம் மட்டும் போலீசார் பாதுகாப்புடன் மயானத்திற்கு செல்ல அனுமதிப்பதாகவும், மற்ற நேரங்களில் பாதையை அடைத்து வைத்து மிரட்டுவதாகவும் புகார் தெரிவித்தனர்.