சேலம் : சேலம் மாவட்டம், மாமாங்கம் பகுதியில் பழமையான ராமர் பாதம் கோயிலை ஜேசிபி மூலம் அகற்றிவிட்டு, அந்த நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில் SAIL Refractory Company Limited நிறுவன உயர் அதிகாரிகள் ஈடுபடுவதாகவும், ராமர் பாதம் கோயில் வழியாக செல்லும் பழமையான நீர் ஓடையை ஏற்கனவே ஆக்கிரமித்துள்ள இந்நிறுவனம் தற்போது கோயிலை சுற்றியுள்ள பகுதிகளையும், கையகப்படுத்த முயற்சி செய்வதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், "மாமாங்கம் கீழ் போர்டு ஓடையில் இருந்து வழிந்து ஓடும் தண்ணீர் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக அருகாமையில் உள்ள ஜாகிர் பெரிய மோட்டூர், ஜாகிர் ரெட்டிபட்டி, சூரமங்கலம் பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு சென்றடைகிறது.
இதையும் படிங்க :சேலம் ராமர் பாதம் கோயில் விவகாரம்; ஜேசிபியை சிறைபிடித்த கிராமத்தினர்! - salem ramar temple
SAIL Refractory Company Limited நிறுவனம் அரசு புறம்போக்கு நிலத்தில், சுற்றுச்சுவர் அமைத்ததோடு, ஓடை தண்ணீர் செல்ல வழி இல்லாமல் ஆக்கிரமிப்பும் செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணியும், மேம்பாலம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. ஓடை ஆக்கிரமிப்பை அகற்றினால் தான் நெடுஞ்சாலை பணியில் தொய்வு ஏற்படாது.
மேலும், ஓடையில் இருந்து செல்லும் தண்ணீர் தங்கு தடை இன்றி ஏரிகளுக்கு செல்ல ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், புரட்டாசி மாதம் துவங்கியுள்ளதால் பக்தர்கள் தடையின்றி ராமர் பாதம் கோயிலுக்கு சென்று வழிபட வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், நிறுவனம் ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என தெரிவித்துள்ளனர்.