தூத்துக்குடி: கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி. இந்த நிலையில், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, தருவைகுளம் கிராமத்தில் நன்றி தெரிவிக்கச் சென்ற போது, தருவைகுளத்தைச் சேர்ந்த கிராம மக்கள் திடீரென எம்பி கனிமொழியை முற்றுகையிட்டனர்.
அதாவது, தருவைகுளத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, கடந்த 5ஆம் தேதி மன்னார் தெற்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளனர். பின்னர், அந்த 22 மீனவர்களையும் கைது செய்து ஆக.20ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து, மீனவர்கள் 22 பேரும் வாரியாபொல சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பான வழக்கு நேற்று புத்தளம் நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் வாரியபொல சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால், தூத்துக்குடி தருவைகுளம் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.