விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 14ஆம் தேதி துவங்கியது.
24ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. தகுதியான மனுக்களில் யாரும் வாபஸ் பெறாததால் 29 வேட்பாளர்களுக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 26ஆம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடவில்லை என்று அறிவித்த நிலையில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சை வேட்பாளர்கள் என 29 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பிரச்சாரம் நாடைபெற்ற நிலையில், கடந்த திங்கட்கிழமை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
இதற்காக 276 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு, அனைத்து மையங்களிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இத்தேர்தலில் 1,16,962 ஆண்கள், 1,20,040 பெண்கள், 29 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,37,031 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
42 மையங்கள் பதற்றமானதாகவும், 3 மையங்கள் மிக பதற்றமானதாகவும் கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இன்று பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வரும் 13ஆம் தேதி நடைபெறுகிறது. காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, தனது சொந்த ஊரான அன்னியூர் ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார். இதேபோல், விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பனையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி வாக்களித்தார்.
இதனிடையே, விக்கிரவாண்டி தொகுதியில் ஒட்டன்காடுவெட்டி, மாம்பழப்பட்டு, கானை உள்ளிட்ட மூன்று வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் நிலவியது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள வயர் பழுதானதால் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் நிலவியது. சிறிது நேர தாமதத்துக்குப் பின் பழுதுகள் சரிசெய்யப்பட்டு மாம்பழப்பட்டு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கியது.