தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விக்கிரவாண்டியை வெல்லப்போவது யார்? நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் கூறுவது என்ன? - VIKRAVANDI ASSEMBLY bye ELECTION - VIKRAVANDI ASSEMBLY BYE ELECTION

Vikravandi By poll date: விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் சட்டப்பேரவை இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடந்து முடிந்த நாடாளுமனறத் தேர்தலில் இத் தொகுதியில் பதிவான வாக்குளின் அடிப்படையில் அதிமுகவுக்கு சுமார் 7 ஆயிரம் வாக்குகள் மட்டுமே குறைவாக கிடைத்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 10, 2024, 1:20 PM IST

சென்னை: மக்களவைத் தேர்தல் முடிந்த சூட்டோடு சூடாக நாடு முழுவதும் இடைத் தேர்தலுக்கான அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறது தேர்தல் ஆணையம். இதன் அடிப்படையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மறைவால் காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி (10/07/2024 ) நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்குமா? என விவாதிக்கப்படும் சூழலில், விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட விக்கிரவாண்டியில் பதிவான வாக்கு நிலவரங்களை ஆராயலாம்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் பிரதான அரசியல் கட்சிகளின் சார்பில் கீழ்க்கண்டோர் போட்டியிட்டனர்
திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார்
அதிமுக வேட்பாளர் ஜெ பாக்யராஜ்
பாஜக கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர்

இவர்களில் பானை சின்னத்தில் போட்டியிட்ட ரவிக்குமார் மக்களவை உறுப்பினராக தேர்வானார். தேர்தல் ஆணையத்தின் தரவுகளின் படி விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கட்சி வாரியாக கிடைத்த வாக்குகளைப் பார்க்கலாம்.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் கட்சிகள் பெற்ற வாக்குகள்
திமுக கூட்டணி (வி.சி.க.) 72,188
அதிமுக 65,365
பா.ஜ.க கூட்டணி (பா.ம.க.) 32,198
நாம் தமிழர் 8,352

இதனடிப்படையில், திமுக கூட்டணி வேட்பாளருக்கும், அதிமுக வேட்பாளருக்கும் இடையே சுமார் 7 ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகள் மட்டுமே வேறுபாடு உள்ளது. இடைத் தேர்தலில் 32 ஆயிரம் வாக்குகள் வாங்கியுள்ள பா.ம.க.வும் முக்கிய பங்காற்றும். ஆனால் கடந்த காலங்களில் இடைத் தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளது. எனவே இந்த வாக்குகள் எந்த கட்சிக்கு செல்லும் என்பது கேள்விக்குறியே.

நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு சதவீதத்தை அரசியல் கட்சிகள் தங்களின் தர மதிப்பீடாக கையாண்டு வருகின்றன. இந்த வாக்குகள் சட்டமன்றத் தேர்தலிலும் தங்களுக்கு கிடைக்கும் என பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் நம்பிக்கையுடன் இருக்கின்றன. இந்நிலையில் சட்டமன்ற இடைத் தேர்தலில் இதே நிலை நீடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அதே நேரத்தில் ஆளுங்கட்சி அதிகாரத் தலையீடு இன்றி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதும் கோரிக்கையாக உள்ளது. விக்கிரவாண்டி பார்முலா என்ன சொல்லப் போகிறது என்பது வாக்கு எண்ணிக்கை நாளான, ஜூலை 13ம் தேதி தெரிந்து விடும்.

இதையும் படிங்க: ஜூலை 10-ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல்

ABOUT THE AUTHOR

...view details