தேஜ்பூர்: இந்தியாவில் மருத்துவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அண்மையில் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
சில தினங்களுக்கு முன்பு சென்னை கிண்டியில் அரசு மருத்துவமனை மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மருத்துவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மருத்துவமனையிலேயே இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுவது மருத்துவர்களிடையே பீதியை ஏற்படுத்தி வரும் நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மருத்துவமனையில் தனது மனைவி மற்றும் மகள்களை தந்தையே அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மூச்சு முட்டும் டெல்லி; மிக மோசமாக பதிவாகியிருக்கும் காற்றின் தரம்!
அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு கமெங் மாவட்டத்தில் செபா சிவில் மருத்துவமனைக்குள் நேற்று காலை 11.30 மணியளவில் மர்ம நபர் ஒருவர் புகுந்துள்ளார். பின்னர் அந்த நபர் அங்கிருந்த பெண்கள் உட்பட ஆறு பேர் மீது கூர்மையான ஆயுதத்தால் சரமாரியாக தாக்கியுள்ளார். தடுக்க வந்த காவலரையும் அவர் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில், மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் குறித்து கிழக்கு காமெங் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கே. சிகோம் தெரிவிக்கையில், உயிரிழந்த மூவரும் தாக்கியவரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளளது. கொலையாளியின் சகோதரி அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தன்று மருத்துவமனைக்கு ஆயுதத்துடன் வந்த நபர் முதலில் தனது சகோதரியை தாக்கியுள்ளார்.
பின்னர் அவரது மனைவி தாடே சோங்பியா, மகள்கள் நாகியா சோங்பியா மற்றும் பாசா வெல்லி ஆகிய மூவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவர்கள் மூன்று பேரும் இறந்துவிட்டனர். மேலும் ஆறு பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், கொலையாளியை தடுக்க வந்த காவலர் மின்லி கெயிக்கு காயம் ஏற்பட்டு அவருக்கு இட்டாநகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொலையாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்