சென்னை: கங்குவா திரைப்படம் சூர்யா திரை வாழ்வில் அதிக வசூலை பெற்று சாதனை படைத்து வருகிறது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள கங்குவா திரைப்படம் இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேற்று (நவ.14) வெளியானது.
சூர்யா திரை வாழ்வில் அதிக பொருட்செலவில் தயாரான திரைப்படமாக கங்குவா அமைந்தது. சூர்யா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான கடைசி திரைப்படம் ’எதற்கும் துணிந்தவன்’. இதனையடுத்து சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு கங்குவா திரைப்படம் பிரமாண்டமாக வெளியானது. தமிழ்நாட்டில் தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங் தாமதமாக தொடங்கிய நிலையிலும், நேற்று அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட்கள் விற்று தீர்ந்தது.
டீசர், டிரெய்லர் ஆகியவை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், கங்குவா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் பிரபல சினிமா வர்த்தக இணையதளம் சாக்னில்க் வெளியிட்டுள்ள தகவலின்படி கங்குவா திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தியா அளவில் 22 கோடி வசூல் செய்துள்ளது. உலக அளவில் கிட்டதட்ட 40 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் சூர்யா திரை வாழ்வில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக கங்குவா சாதனை படைத்துள்ளது. சூர்யா நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் வெளியான ’எதற்கும் துணிந்தவன்’ இந்திய அளவில் முதல் நாளில் 11 கோடி ரூபாய் வசூல் செய்தது. அதனை விட இரட்டிப்பாக கங்குவா வசூல் செய்துள்ளது. அதேபோல் ’அமரன்’ திரைப்பட முதல் நாள் வசூலையும் கங்குவா முறியடித்துள்ளது.
இதையும் படிங்க: சூர்யா நடிப்பு பயங்கரம், ஆனால் கதை தான் சொதப்பல்... ’கங்குவா’ பற்றி ஆடியன்ஸ் கூறியது என்ன?
அமரன் திரைப்படம் முதல் நாளில் 21.4 கோடி ரூபாய் வசூல் செய்தது. அதனை விட சற்று அதிக வசூலை கங்குவா பெற்றுள்ளது. மேலும் இந்த வருடம் வெளியான படங்களில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் கங்குவா 22 கோடியுடன் மூன்றாவது இடம்பிடித்துள்ளது. முதலிடத்தில் கோட் திரைப்படம் 39.15 கோடி, இரண்டாம் இடத்தில் வேட்டையன் 27.75 கோடியுடன் உள்ளது. தமிழ்நாட்டில் 2024 வருடம் இதுவரை முதல் நாளில் அதிக வசூல் செய்த படங்களை பார்க்கலாம்.
- தி கோட் - Rs 39.15
- வேட்டையன் - Rs 27.75 Cr
- கங்குவா - Rs 22 Cr
- அமரன் - Rs 17 Cr
- இந்தியன் 2 - Rs 16.5 Cr
- தங்கலான் - Rs 12.4 Cr
- ராயன் - Rs 11.85 Cr
- கேப்டன் மில்லர் - Rs 8.05 Cr
- கல்கி 2898 AD Rs 4.5 Cr
- அரண்மனை 4 Rs 4.15 Cr
கங்குவா திரைப்பட வசூல் வார இறுதி நாட்களில் அதிகரித்து சூர்யா திரை வாழ்வில் அதிக வசூல் செய்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்