விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து, விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள 276 வாக்குச்சாவடி மையங்களில் கடந்த ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
மேலும், நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நாளை (ஜூலை 13) விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. முதலாவதாக தபால் வாக்கு எண்ணும் பணியும், அதனைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை 14 மேசைகளில் 20 சுற்றுகளாக நடைபெறவுள்ளது. இதில் மேசை ஒன்றிற்கு 1 மேற்பார்வையாளர், 1 உதவியாளர் மற்றும் 1 நுண்பார்வையாளரும், அஞ்சல் வாக்கு எண்ணிக்கை 2 மேசைகளில் நடைபெறவுள்ளது.
இதில் மேசை ஒன்றிற்கு 1 மேற்பார்வையாளர், 1 உதவியாளர் மற்றும் 1 நுண்பார்வையாளரும், பாதுகாப்பு அறையிலிருந்து வாக்கு எண்ணும் பகுதிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிக்கு 14 கிராம உதவியாளர்கள், வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், இதர பணியாளர்கள் என மொத்தம் 150 நபர்கள் வாக்கு எண்ணிக்கை பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று, வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பு பணிகளில் ஆயிரத்து 195 காவலர்களும், 24 மத்திய துணை காவல் படையினர்களும் ஈடுபடவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'நரம்பு பகுதிக்கு குறி'.. கொலைக்கு 45 நிமிடங்கள் முன்பு ஸ்கெட்ச்.. ஆம்ஸ்ட்ராங் வீழ்த்தப்பட்டது எப்படி? - bsp armstrong murder plan