திருநெல்வேலி:நடிகர் எம்ஜிஆருக்கு பிறகு அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். அவருக்கு பட்டி தொட்டி எங்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உண்டு. சினிமாவில் கொடி கட்டி பறந்த விஜயகாந்த் அதன் மூலம் கிடைத்த மக்கள் செல்வாக்கை பயன்படுத்தி அரசியலில் தடம் பதித்தார். அவர் சந்தித்த முதல் தேர்தலிலையே சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதோடு, தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராகும் அளவுக்கு அரசியலில் செல்வாக்கினைப் பெற்றார்.
இந்நிலையில், நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். சினிமாவிலும், அரசியலும் உச்சம் பெற்றாலும், பழகுவதற்கு எளிமையானவராகவும், உதவும் உள்ளம் கொண்டவராகவும் இருந்ததால் அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரம் மக்கள், அரசியல் வேறுபாடு இல்லாமல் கலந்து கொண்டனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர், நடிகர் எம்ஜிஆர் ,பேரறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் வரிசையில் விஜயகாந்த்துக்கும் மிகப்பெரிய கூட்டம் கூடியது.
விஜயகாந்தின் நண்பர் பாலகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu) முதலாம் ஆண்டு நினைவு நாள்:
அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகின்றது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள், விஜயகாந்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதனால், அவரது நினைவிடத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இன்று அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
விஜயகாந்துடன் நண்பர் பாலகிருஷ்ணன் எடுத்துக்கொண்ட புகைப்படம் (ETV Bharat Tamil Nadu) விஜயகாந்த் மண்ணை விட்டு மறைந்தாலும், அவரது உதவும் குணங்களால் இன்னும் பலர் அவரை நினைத்து வாடி வருகின்றனர். அந்த வகையில் விஜயகாந்துடன் ஒன்றாக பள்ளியில் பயின்ற அவரது பால்ய நண்பர் ஒருவர், விஜயகாந்த் நினைவு தினத்தை முன்னிட்டு ஆறு மாதமாக தாடி வளர்த்து வந்துள்ளார்.
விடுதியில் படித்த விஜயகாந்த்:
விஜயகாந்த் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவரை வெளியூரில் தங்கி படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அவரது பெற்றோர்கள், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே விகே.புரத்தில் உள்ள புனித மரியம்மை பள்ளியில் சேர்த்துள்ளனர். 1966, 1967 மற்றும் 1968 ஆகிய ஆண்டுகளில் விஜயகாந்த் இங்கு விடுதியில் தங்கி 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படித்துள்ளார்.
விஜயகாந்துடன் நண்பர் பாலகிருஷ்ணன் எடுத்துக்கொண்ட புகைப்படம் (ETV Bharat Tamil Nadu) சினிமாவில் உச்சம் தொட்ட விஜயகாந்த்:
அப்போது அவருடன் விகே.புரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (எ) பாலு என்பவர் ஒரே வகுப்பில் படித்துள்ளார். பள்ளி பருவத்தில் இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் அளவுக்கு நெருக்கமான நண்பர்களாக இருந்துள்ளனர். பின்னர் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு விஜயகாந்த் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். பாலசுப்பிரமணியன் படித்து முடித்து மின்வாரியத்தில் பணியில் சேர்ந்துள்ளார். மறுபுறம் விஜயகாந்த் நடிகராகி சினிமா துறையில் உச்சம் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க:டெல்லி கணேஷ் முதல் டேனியல் பாலாஜி வரை; இந்திய சினிமாத்துறை 2024இல் இழந்த பிரபலங்கள்!
புகைப்படம் கூறும் நினைவுகள்:
இதன், பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது நண்பர் விஜயகாந்தை பாலகிருஷ்ணன் பொள்ளாச்சியில், பூந்தோட்ட காவல்காரன் படப்பிடிப்பில் சந்தித்துள்ளார். அதன் பின்னர், விஜயகாந்த் படப்பிடிப்பிற்காக பொள்ளாச்சிக்கு வரும் ஒவ்வொரு முறையும் பாலசுப்ரமணியன் அவரை தவறாமல் சந்தித்துள்ளார். அப்படி செல்லும், ஒவ்வொரு முறையும் விஜயகாந்துடன் புகைப்படம் எடுத்துள்ளார். தொடர்ந்து, விஜயகாந்த் மூலம் நடிகர்கள், மனோரமா, பிரபு, விஜயகுமார் உள்ளிட்ட பிற நடிகர்களுடனும் பாலகிருஷ்ணன் புகைப்படம் எடுத்துள்ளார்.
விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவுடன் நண்பர் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி எடுத்துக்கொண்ட புகைப்படம் (ETV Bharat Tamil Nadu) அவ்வாறு நண்பருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்றளவும் பாலகிருஷ்ணன் தனது வீட்டில் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார். தற்போது பணி ஓய்வுக்கு பிறகு வீட்டில் ஓய்வெடுத்து வரும் பாலகிருஷ்ணன், விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தனது வீட்டில் உள்ள விஜயகாந்த் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
நண்பனே இல்லாதபோது அழகு எதற்கு?
இது குறித்து, பாலசுப்ரமணியன் ஈடிவி பாரத் தமிழுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், “நானும் விஜயகாந்த்தும் ஒன்றாக படித்தோம். அப்போது விஜயராஜ் ( விஜயகாந்தின் இயற்பெயர் விஜயராஜ்) என்று தான் அவரை அழைப்போம். பள்ளி பருவத்தில் இருவரும் ஊர் சுற்றியுள்ளோம். ஒருமுறை குற்றாலம் செல்லும் போது ரயிலில் அபாய சங்கிலியை பார்த்து இது என்ன? என்று கேட்டார்.
விஜயகாந்துடன் நண்பர் பாலகிருஷ்ணன் எடுத்துக்கொண்ட புகைப்படம் (ETV Bharat Tamil Nadu) இது அபாயம் ஏற்படும்போது இழுக்க வேண்டும், மற்ற நேரங்களில் இழுத்தால் சத்தம் போடுவார்கள் என விஜயகாந்திடம் கூறினேன். ஆனால், என் பேச்சை கேட்காமல் அபாய சங்கிலியை பிடித்து விஜயகாந்த் இழுத்து விட்டார். இதற்கு அதிகாரிகள் கண்டித்தனர். இதனையடுத்து, அனைவரும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தோம். அந்த அளவுக்கு சிறுவயதில் விஜயகாந்த் குறும்பு செய்வார்.
அவர் சினிமாவில் நடித்தபோது நான் பொள்ளாச்சியில் பணி புரிந்தேன். அப்போது விஜயகாந்தை நேரில் சந்தித்தேன், அவர் மிகவும் மகிழ்ச்சியோடு என்னுடன் பழகினார். எனது குடும்பத்தோடும் பலமுறை அவரை சந்தித்துள்ளேன். தற்போது எனது நண்பனை இழந்து ஒரு வருடமாக கவலையோடு இருக்கிறேன். கடந்த ஆறு மாதமாக தாடி வளர்த்து வருகிறேன். நண்பனே இல்லாத போது நாம் ஏன் முகத்தை அழகாக வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தாடியை எடுக்காமல் இருக்கிறேன்” என்று கூறினார்.