சென்னை: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு திருவள்ளுவர் சிலை --விவேகானந்தர் பாறை இடையே ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி சென்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து படகு மூலம் திருவள்ளூர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அப்போது அவரை பொன்னாடை அணிவித்து புத்தகம் பரிசளித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கும்-விவேகானந்தர் பாறைக்கும் இடையே ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கண்ணாடி இழை பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாலத்தின் மீது நடந்து அதனை பார்வையிட்டார். அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின், தூத்துக்குடி எம்பி கனிமொழி உள்ளிட்டோர் உடன் சென்றனர். திருவள்ளுவர் சிலை குறித்த லேசர் காட்சியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதையும் படிங்க: 'இது உட்கட்சி பிரச்சனை, யாரும் பேச வேண்டாம்'.. ராமதாஸை சந்தித்த பின்னர் அன்புமணி சொன்னது என்ன?
கன்னியாகுமரியில் கடந்த 2000ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி திறந்து வைத்தார். திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில் வெள்ளிவிழா கொண்டாடப்படுகிறது. இதற்காக சிலை புனரமைப்பு செய்யப்பட்டது. மேலும் திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் பாறை இடையே ரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கடலுக்கு நடுவே இதுபோன்ற ஒரு பாலம் அமைக்கப்படுவது இந்தியாவிலேயே முதன் முறை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து திருவள்ளுவர் சிலை அருகில் நடைபெற்ற நிகழ்வில் திருக்குறள் நெறி பரப்பும் தகைமையாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புப் பரிசுகளை அவர் வழங்கினார். பின்னர் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மவர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் பூம்புகார் கைவினைப் பொருட்கள் அங்காடியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.