ஹைதராபாத்:அரசியல் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்து நிலையில் முதல் மாநாட்டையும் வெற்றி கரமாக நடத்தியுள்ள விஜய் அடுத்ததாக தேர்தலில் போட்டியிடுவதற்காக என்ன சின்னத்தை தேர்ந்தெடுப்பார் என்று அவரது ரசிகர்களும், தொண்டர்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
எந்த ஒரு அரசியல் கட்சியும் தேர்தல் அரசியலை முதன்மையான நோக்கமாக கொண்டு செயல்படும்போது, வாக்காளர்கள் மனதில் எளிதாக பதியும்படி ஒரு சின்னத்தை தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் திமுக உதயசூரியன் சின்னத்தையும், அதிமுக இரட்டை இலை சின்னத்தையும் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு சின்னங்களும் வாக்காளர்கள் மத்தியில் எளிதாக இடம் பிடித்துள்ளன. அதே போல தேசிய கட்சிகளான பாஜகவின் தாமரை, காங்கிரஸ் கட்சியின் கை சின்னம் ஆகியவையும் வாக்காளர்கள் மத்தியில் சென்று சேர்ந்திருக்கின்றன.
தவெகவின் சின்னம் என்ன?: இப்போது புதிதாக தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியைத் தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக கொண்டு செயல்படுவதாக கூறியிருக்கிறார். எனவே அந்த தேர்தலில் அவர் தமது கட்சிக்கான சின்னமாக எதை தேர்வு செய்ய உள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் கீழ் பிரிவு 29ஏவின் கீழ் தவெகவை தேர்தல் ஆணையம் பதிவு பெற்ற கட்சியாக பதிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி அரசியல் கட்சியை பதிவு செய்வதற்காக கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தேர்தல் ஆணையத்துக்கு தவெக சார்பில் விண்ணப்பம் அனுப்பப்பட்டது. இதன் பின்னர் தவெக அரசியல் கட்சியை பதிவு செய்வதில் ஏதேனும் ஆட்சேபணைகள் உள்ளதா என ஒரு செய்தித்தாள் மூலம் அறிக்கை வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 11ஆம் தேதி தவெக கட்சியை தேர்தல் ஆணையம் பதிவு செய்தது. இதனை செப்டம்பர் 8ஆம் தேதி கட்சி தலைவர் விஜய் அறிவித்தார்.
பொது சின்னம் கிடைக்க வாய்ப்பு:தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டதன் மூலம் தவெகவுக்கு ஒரு பொது சின்னம் ஒதுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் விஜயின் தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற வேண்டும் எனில் ஒரு சின்னம் முன்பதிவு செய்யப்படும். தேர்தலில் 6 சதவிகிதத்துக்குக் குறைவு இல்லாமல் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். அதே போல சட்டப்பேரவையில் குறைந்த பட்சம் இரண்டு பேராவது இடம் பெற்றிருக்க வேண்டும். அப்படி இருக்கும்பட்சத்தில் தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்தை பெறும்.
இதையும் படிங்க:
- ஒன்றியம், மாநிலம் இரண்டையும் வெளுத்த விஜய்:"டீசன்ட்டா அட்டாக்! ஆனா ரொம்ப டீப் ஆன அட்டாக்!"
- தவெகவின் சித்தாந்த எதிரி, அரசியல் எதிரி யார்? மாநாட்டில் விஜய் ஓப்பன்டாக்!
மொத்த தொகுதிகளில் 3 சதவிகித தொகுதிகள் அதாவது 7 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் தேர்தல் ஆணையம் தவெகவை அங்கீகரிக்கும். தேர்தல் சின்னம்(முன்பதிவு மற்றும் ஒதுக்கீடு) உத்தரவு 1968ன் படி கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்த உத்தரவின் வழிமுறை 10பி-யின் படி பதிவு செய்யப்பட்ட ஆனால், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிக்கு பொதுத்தேர்தலின் போது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒரு பொதுவான சின்னம் ஒதுக்கப்படும்.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள்:234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 12 இடங்களிலாவது தவெக போட்டியிட வேண்டும். அப்போதுதான் பொதுவான சின்னம் ஒதுக்கப்படும். சட்டப்பேரவையின் பதவிகாலம் முடிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே பொது சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். தற்போதைய 16வது சட்டப்பேரவையின் பதவிகாலம் 2026ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி முடிவடைகிறது. எனவே, பொது சின்னம் கேட்டு 2025ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதியன்றோ அல்லது அதன் பின்னரோ தேர்தல் ஆணையத்துக்கு தவெக விண்ணப்பிக்க வேண்டும். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சின்னம் ஒதுக்கப்படும் என்று தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் தெரிவிக்கின்றன.