பூஞ்சேரி, செங்கல்பட்டு: வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வரலாறு படைப்போம் எனவும் தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும், எந்த ஒரு மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால், மாநில அரசின் மொழிக் கொள்கையை, கல்விக் கொள்கையைக் கேள்விக் குறியாக்கி, வேறு ஒரு மொழியை அரசியல்ரீதியாக வலுக்கட்டாயமாகத் திணித்தால் எப்படி? என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. விழா மேடையில் கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் பேசியதாவது:
"எனது தோழர், பிரசாந்த் கிஷோருக்கு நன்றி. இந்த அரசியல் என்றாலே வேற லெவல் தான். ஏனென்றால், அரசியலில் மட்டும் தான் யார் யாரை ஆதரிப்பார்கள்? எதிர்ப்பார்கள்? எனத் தெரியாது. அதனைக் கணிக்கவே முடியாது. அதனால் தான் அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை எனக் கூறுவார்கள்.
தவெகவிற்கு இது முக்கியமான காலகட்டம்:
ஆனால், மக்களுக்குப் பிடித்தவர்கள் அரசியலுக்கு வரும் போது ஒரு சிலருக்கு எரிச்சல் வரத் தான் செய்யும். ஏனென்றால், இதுவரை மக்கள் நாம் சொன்ன பொய்யெல்லாம் நம்பி நமக்கு வாக்களித்துக் கொண்டு இருந்தார்கள். தற்போது, இவன் கூறுவது மக்கள் மனதிற்கு மிகவும் நெருக்கமாக உள்ளதே?. இவனை என்ன செய்யலாம்?, எப்படி Close பண்ணலாம்? எனக் குழப்பத்தில் உள்ளனர். அந்த குழப்பத்தில், என்ன செய்வது எனத் தெரியாமல், வர்றவன் போகிறவன் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறான் எனக் கூறத் தொடங்குவார்கள்.
இப்படிப்பட்ட ஒரு அரசியல் களத்தில் ஒரு பயம், பதற்றம் இல்லாமல், வரும் எதிர்ப்பை எல்லாவற்றையும் இடது கையில் (Left Hand) சமாளித்துக் கொண்டு, இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது தவெக. இது தான் ஒரு கட்சிக்கு மிக முக்கியமான காலகட்டம். ஏனென்றால், ஒரு அரசியல் கட்சிக்கு பெரிய பலமே அக்கட்சியின் கட்டமைப்பு தான். அதுதான் அக்கட்சியின் வேர் மாதிரி. ஆலமரம் மாதிரி கட்சி வளரவேண்டும் என்றால், அதற்கான வேர்களும், விழுதுகளும் உறுதியாக இருக்க வேண்டும். அதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தவெக பண்ணையார்களுக்கான கட்சி இல்லை:
இந்த நேரத்தில் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. என்னவென்றால், நம்முடைய மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் இளைஞர்களாகவே உள்ளனராம். அப்படி இருந்தால் என்ன? கட்சி தொடங்கிய போது, அறிஞர் அண்ணா பின்னாலும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பின்னால் நின்றதும் இளைஞர்கள் தான். அவர்கள் இருவருக்கும் முறையே 1967 மற்றும் 1977 தேர்தல்களில் மிகப் பெரிய வெற்றி கிடைத்தது. அதுதான் வரலாறு.
மேலும், நமது கட்சி நிர்வாகிகள் அனைவரும் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர்கள் எனக் கூறுகின்றனர். சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர்கள் தான் பெரிய அளவில் சாதனை படைத்துள்ளனர். அது மட்டுமின்றி, நமது கட்சி எளிய மக்களுக்கான கட்சி தானே?, அப்படியானால் கட்சி நிர்வாகிகளும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகத் தான் இருப்பார்கள். நமது கட்சி ஒன்றும் பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது.
2026-ல் வரலாறு படைப்போம்:
முந்தைய காலத்தில் பண்ணையார்கள் தான் பதவியில் இருப்பார்கள். இப்போது அப்படியே தலைகீழாகப் பதவியில் இருப்பவர்கள் எல்லாம் பண்ணையார்களாக மாறி விடுகின்றனர். மக்களின் நலன், நாட்டின் நலன், வளர்ச்சி என எது குறித்தும் கவலை கொள்ளாமல், பணம்.. பணம் என உள்ள பண்ணையார்களை அரசியலை விட்டே அகற்றுவது தான் நமது முதல் வேலை. அதனை ஜனநாயக முறைப்படி செய்யவே 2026 தேர்தலைச் சந்திக்க உள்ளோம். அப்போது வரலாறு படைப்போம்.
தற்போது, தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 69 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் நமது கட்சி தோழர்களை நியமிக்க உள்ளோம். விரைவில் பூத் கமிட்டி மாநாடு ஒன்றை நடத்த உள்ளோம். அன்று தெரியும் தவெக எந்த ஒரு பெரிய கட்சிக்கும் சளைத்தது இல்லை என.
ஒரு மொழியை வலுக்கட்டாயமாக திணிக்கக் கூடாது:
மும்மொழிக் கொள்கையைச் செயல்படுத்தாவிட்டால் கல்விக்கான நிதியை மாநில அரசுக்குக் கொடுக்க மாட்டார்கள் எனக் கூறுகின்றனர். இது, எல்கேஜி - யூகேஜி பசங்க சண்டை போடுவது போல் உள்ளது. இந்நிலையில், நமது பாசிசமும், பாயசமும் (அரசியல் எதிரியும், கொள்கை எதிரியும்) பேசி வைத்து, சமூக வலைதளத்தில் ஹாஸ் டேக் (Hashtag) போட்டு விளையாடிக் கொண்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் அடித்துக் கொள்வது போல் அடித்துக் கொள்வார்களாம். அதனை மக்கள் நம்பனுமா? 'What Bro It's Very Wrong Bro'. இதற்கு நடுவில் நம்ம பசங்க, 'TVKForTN' என சம்பவம் செய்துவிட்டு வெளியே வந்துவிடுகிறார். ஸ்லீப்பர் செல் போன்று நீங்கள் எல்லாம் எங்கே சார் இருக்கிறீர்கள்?.
இதெல்லாம் ஏமாற்று வேலை என மக்களுக்கே தெரியும். நம்ம ஊரு சுயமரியாதை நிறைந்த ஊர், நாம் அனைவரையும் மதிப்போம், அதற்கான சுயமரியாதையை மட்டும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம். நாம் அனைத்து மொழிகளையும் மதிப்போம் அதில் மாற்றுக் கருத்து கிடையாது. தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும், எந்த ஒரு மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.
ஆனால், கூட்டாட்சித் தத்துவத்தை மீறி, மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக, ஒரு மாநில அரசின் மொழிக் கொள்கையை, கல்விக் கொள்கையைக் கேள்விக் குறியாக்கி, வேறு ஒரு மொழியை வலுக்கட்டாயமாகத் திணிப்பது. அதுவும் அரசியல்ரீதியாகத் திணித்தால் எப்படி? ஆகையால் தவெக சார்பாக பொய்ப் பிரச்சாரம் எல்லாவற்றையும் புறம் தள்ளிவிட்டு, இதனை உறுதியாக எதிர்ப்போம். உறுதியுடன் இருங்கள் வெற்றி நிச்சயம்" என பேசினார்.