சென்னை:2024 ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது நடிகர் பிரகாஷ் ராஜ்-க்கு வழங்கப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.
சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு, ‘அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு’ ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கி வருகிறோம். கடந்த 2022ஆம் ஆண்டு முதல் கூடுதலாக ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கி வருகிறோம்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, திராவிட கழக தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் து.ராஜா, இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ். பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்ட சான்றோர் பலருக்கு இதுவரை விசிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.