திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஆற்காடு சாலையில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. காலை, மாலை என 2 ஷிப்ட் முறையில் இயங்கி வரும் இக்கல்லூரியில் சுமார் 8 ஆயிரத்து 500 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அதில் பெண்கள் மட்டுமே 4,500 பேர் படிப்பதாகக் கூறப்படுகிறது.
கல்லூரி கழிப்பறையில் பாம்பு இருக்கும் காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu) தற்போது இந்த கல்லூரியில் உள்ள பெண்கள் கழிப்பறை சுகாதாரமற்று, பராமரிப்பு இல்லாமலும் காணப்படுகிறது. மேலும், கழிப்பறையைச் சுற்றி புதர்கள் மண்டிக் கிடப்பதால், மாணவிகள் கழிப்பறைக்கு மிகுந்த அச்சத்துடனே சென்று வருவதாகவும், இதனால் சில மாணவிகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அரசு கலைக் கல்லூரி முதல்வர் அறை அருகே உள்ள பெண்கள் கழிப்பறையில் கடந்த சில நாட்களுக்கு முன் பாம்புகள் கூட்டம் கூட்டமாக காணப்பட்டதால், கல்லூரி மாணவிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடி உள்ளனர். அதனை கல்லூரி மாணவி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து, கல்லூரி நிர்வாகம் சார்பில் "இந்த கழிப்பறையில் பாம்புகள் உலா வருவதால், யாரும் இந்த கழிப்பறையை பயன்படுத்த வேண்டாம்" என எழுதி, கழிப்பறை சுவற்றில் ஒட்டியுள்ளனர். தற்போது கல்லூரி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினர் உடனடியாக இந்த கழிப்பறையைச் சுற்றி மண்டிக் கிடக்கும் முட்புதர்களையும், கழிப்பறையையும் சுத்தம் செய்து, சுகாதாரமான கழிப்பறையாக உருவாக்க வேண்டும் என்பதே அக்கல்லூரி மாணவிகளின் கோரிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
அதுமட்டுமின்றி, போதுமான தூய்மைப் பணியாளர்களை நியமனம் செய்து கழிப்பறைகளை பராமரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது இதுதொடர்பாக கல்லூரி முதல்வரிடம் கேட்டபோது, பெண்கள் கழிப்பறையில் பாம்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கல்லூரி முதல்வர் கூறுகையில், தீயணைப்புத் துறை ஒரு பாம்பை பிடித்துச் சென்றனர் என்றும், கழிவறை தூய்மைப்படுத்தவும் சுற்றுப்புற இடங்களை தூய்மைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: கமுதி டிரைவர் கொலை; கைதான நபருக்கு மாவு கட்டு.. என்ன நடந்தது?